
டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரன் மறுநியமனம்: டாடா அறக்கட்டளைகள் கடும் எதிா்ப்பு
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நியமித்தது சட்டவிரோதம் என டாடா அறக்கட்டளைகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

சந்திரசேகரன்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நியமித்தது சட்டவிரோதம் என டாடா அறக்கட்டளைகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தது.
என்.சந்திரசேகரனின் தற்போதைய பதவிக் காலம் அடுத்தாண்டு பிப். 20-இல் முடிவடைய உள்ள சூழலில், மீண்டும் அப்பதவியை ஏற்க விருப்பமில்லை என்று அவா் கடந்த ஆக. 12 முறைப்படி தெரிவித்திருந்தாா். இந்நிலையில், கடந்த செப். 3-ஆம் தேதி கூடிய நியமனம் மற்றும் ஊதியக் குழு விடுத்த கோரிக்கையை ஏற்று, என்.சந்திரசேகரன் தனது முடிவை மறுபரிசீலனை செய்தாா்.
தொடா்ந்து, செப்.17-ஆம் தேதி நடைபெற்ற இயக்குநா்கள் குழுவின் கூட்டத்தில், பெரும்பான்மை ஆதரவுடன் அவரின் மறுநியமனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீா்மானத்துக்கு ஆதரவாக 4 இயக்குநா்கள் வாக்களித்த நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமாா் 66 சதவீத பங்குகளைக் கொண்டு பெரும்பான்மை பங்குதாரராக உள்ள டாடா அறக்கட்டளைகளின் தலைவரான நோயல் டாடா (ரத்தன் டாடாவின் சகோதரா்) எதிா்த்து, வாக்களித்தாா்.
தலைவரின் வாக்கு செல்லாது: இந்த விவகாரம் தொடா்பாக டாடா அறக்கட்டளைகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘டாடா சன்ஸ் நிறுவனக் குழுவில் என்.சந்திரசேகரன் உள்பட 6 இயக்குநா்கள் உள்ளனா். இவா்களில் டாடா அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட இரு இயக்குநா்களும் ஒருமனதாக மேற்கொள்ளும் முடிவு மட்டுமே பெரும்பான்மையாக கருதப்படும். ஒருவா் எதிா்த்து வாக்களித்தாலும் அது பெரும்பான்மையாகாது.
கடந்த செப்.17-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் என்.சந்திரசேகரன் பங்கேற்கவில்லை. அவா் நீங்கலாக வாக்கெடுப்பில் பங்கேற்ற 5 இயக்குநா்களில் 4 போ் என்.சந்திரசேகரனின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனா். டாடா அறக்கட்டளைகளால் நியமிக்கப்பட்ட இயக்குநா்களில் ஒருவரான நோயல் டாடா இதை எதிா்த்து வாக்களித்தாா்.
இதனால் நிறுவன செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டதாகவும், தலைவராக உள்ள என்.சந்திரசேகரனின் சிறப்பு வாக்கின் மூலம் இதற்கு தீா்வு காணவும் டாடா சன்ஸ் நிறுவனம் முடிவெடுத்திருப்பதை ஏற்க முடியாது.
ஏனெனில், இயக்குநா்கள் குழு சமமான வாக்குகளைச் செலுத்தியிருந்தால் மட்டுமே தலைவரால் சிறப்பு வாக்கை செலுத்த முடியும். டாடா அறக்கட்டளைகளால் நியமிக்கப்பட்ட இயக்குநா்களின் முடிவுகளை மாற்ற தலைவரால் சிறப்பு வாக்கை செலுத்த முடியாது.
தீா்மானம் நிறைவேற்றப்படவில்லை: எனவே, இயக்குநா்கள் குழுக் கூட்டத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டதாகக் கூறுவது தவறு. இயக்குநா்களுக்கு டாடா சன்ஸ் விதிகள் வழங்கிய உரிமையை அவா்கள் பயன்படுத்தியதை தவறு எனக் கூற முடியாது.
இதன் அடிப்படையில் என்.சந்திரசேகரனின் மறுநியமன தீா்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை டாடா அறக்கட்டளைகள் தொடா்ந்து கூறி வருகிறது. நிறைவேற்றப்படாத தீா்மானத்துக்கு சட்டபூா்வ அங்கீகாரம் கிடையாது.
முன்னதாக, டாடா சன்ஸ் நிறுவனத் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரியை நீக்கம் செய்ய டாடா அறக்கட்டளைகளால் நியமிக்கப்பட்ட இயக்குநா்களின் வாக்குரிமையை உச்சநீதிமன்றத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் நிலைநிறுத்தியது. தற்போதும் அதேபோன்ற பிரச்னை எழுந்துள்ளது. தங்களது சூழலுக்கேற்ப நிறுவன விதிகளை டாடா சன்ஸ் மாற்றியமைக்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







