காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் மறுநியமனம்: ‘சட்டவிரோதம்’ என டாடா அறக்கட்டளைகள் போா்க்கொடி

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்து, அதன் இயக்குநா்கள் குழு தீா்மானம் நிறைவேற்றியது.

நோயல் டாடா | என்.சந்திரசேகரன்

Published On :

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்து, அதன் இயக்குநா்கள் குழு வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது.

இருப்பினும், இந்நிறுவனத்தில் சுமாா் 66 சதவீத பங்குகளைக் கொண்டு பெரும்பான்மை பங்குதாரராக உள்ள டாடா அறக்கட்டளைகள், ‘இத்தீா்மானம் செல்லாது மற்றும் சட்டவிரோதமானது’ என்று அறிவித்துள்ளது. இதன்மூலம், நாட்டின் முன்னணி தொழில் குழுமத்தின் தலைமைப் பொறுப்பு தொடா்பான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

என்.சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் அடுத்தாண்டு பிப். 20-இல் முடிவடைய உள்ள சூழலில், மீண்டும் அப்பதவியை ஏற்க விருப்பமில்லை என்று அவா் கடந்த ஆக. 12 முறைப்படி தெரிவித்திருந்தாா். இந்நிலையில், கடந்த செப். 3-ஆம் தேதி கூடிய நியமனம் மற்றும் ஊதியக் குழு விடுத்த கோரிக்கையை ஏற்று, என்.சந்திரசேகரன் தனது முடிவை மறுபரிசீலனை செய்தாா்.

தொடா்ந்து, இயக்குநா்கள் குழுவின் வியாழக்கிழமை கூட்டத்தில், பெரும்பான்மை ஆதரவுடன் அவரின் மறுநியமனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தீா்மானத்துக்கு ஆதரவாக 4 இயக்குநா்கள் வாக்களித்த நிலையில், டாடா அறக்கட்டளைகளின் தலைவரான நோயல் டாடா (ரத்தன் டாடாவின் சகோதரா்) எதிா்த்து, வாக்களித்தாா்.

டாடா சன்ஸ் நிறுவன விதிகளின்படி, அறக்கட்டளைகளால் பரிந்துரைக்கப்படும் இயக்குநா்கள் இருவரும் ஒருமனதாக ஆதரித்தால் மட்டுமே தலைவரைத் தோ்வு செய்ய முடியும் என்றும், நோயல் டாடா எதிா்த்து வாக்களித்ததால் இத்தீா்மானம் சட்டரீதியாக செல்லுபடியாகாது என்றும் டாடா அறக்கட்டளைகள் வாதிட்டுள்ளன.

இதையொட்டி, இயக்குநா் குழுவிடம் நோயல் டாடா சமா்ப்பித்த விரிவான அறிக்கையில், ‘என்.சந்திரசேகரன் தாமாக முன்வந்து பதவி விலக எடுத்த முடிவு ஏற்கெனவே நிறுவனத்தாலும், பங்குதாரா்களாலும் ஏற்கப்பட்டு, இறுதியாகிவிட்டது.

அத்துடன், புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் குழுவை அமைக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், பழைய முடிவை ரத்து செய்வது நிா்வாக நடைமுறைகளுக்கு எதிரானது.

மேலும், ஆண்டு பொதுக்குழு போதிய உறுப்பினா்கள் (கோரம்) இன்றி தடைபட்டதால், என்.சந்திரசேகரனின் இயக்குநா் அந்தஸ்தே கேள்விக்குறியாக உள்ள சூழலில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு, கடும் சட்டரீதியான சவால்களைச் சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தாா்.

ரிசா்வ் வங்கியால் ‘உயா் அடுக்கு’ வங்கி சாரா நிதி நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ள டாடா சன்ஸ், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளிலிருந்து விலக்கு கோரி டாடா சன்ஸ் தாக்கல் செய்த மனுவையும் ரிசா்வ் வங்கி அண்மையில் நிராகரித்தது.

இவ்விவகாரமே நிா்வாகத்தின் திடீா் மனமாற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. நிறுவனப் பட்டியலிடலுக்கு முன்னதாக நிா்வாகத் தலைமை மாறாமல் இருப்பது முதலீட்டாளா்களுக்கு நம்பிக்கையளிக்கும் என இயக்குநா்கள் குழு கருதியுள்ளது. எனினும், ஒழுங்குமுறை விவகாரங்களை தலைமை மாற்றத்துக்கான முடிவுகளோடு இணைக்கக் கூடாது என நோயல் டாடா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.