
டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!
டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடரவுள்ளது பற்றி...

சந்திரசேகரன் - ANI
டாடா சன்ஸ் குழுமத் தலைவராக சந்திரசேகரன் மேலும் 5 ஆண்டுகள் தொடர்வார் என்று அக்குழுமத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டாடா குழுமத் தலைவராக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற சந்திரசேகரனின் பதவிக்காலம் வருகிற 2027 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ளது.
இதனிடையே, அவரின் பதவி நீட்டிப்புக்கு டாடா சன்ஸ் குழும நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக சந்திரசேகரன் கடந்த மாதம் அறிவித்தார்.
இந்த நிலையில், மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற டாடா சன்ஸ் குழுமத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் மேலும் 5 ஆண்டுகள் தொடர ஒப்புதல் வழங்கப்பட்டதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ராஜிநாமா குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த சந்திரசேகரன், “எனது பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க 'சர் டொராப்ஜி டாடா அறக்கட்டளை' மற்றும் 'சர் ரத்தன் டாடா அறக்கட்டளை' ஆகியவை ஒருமனதாகத் தீர்மானித்து பரிந்துரைத்தன.
2026 பிப்ரவரி 24 அன்று டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஆனால், நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் இதற்கு ஆதரவு தெரிவிக்காததால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
இத்தகைய சூழலில், 2027 பிப்ரவரி 20 அன்று எனது பதவிக்காலம் முடிவடையும்போது, மீண்டும் அப்பதவிக்கு நான் போட்டியிடவோ அல்லது அப்பதவியை ஏற்கவோ விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
டாடா அறக்கட்டளை தலைவரும் ரத்தன் டாடாவின் சகோதரருமான நோயல் டாடாதான் சந்திரசேகரனின் பணி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Summary
Chandrasekaran to continue as Tata Group Chairman - Board reverses decision!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








