டாடா சன்ஸ் இயக்குநா் குழு இன்று கூடுகிறது!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு கூட்டம், மும்பையில் வியாழக்கிழமை (செப். 17) நடைபெறவுள்ளது.

Published On :

டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு கூட்டம், மும்பையில் வியாழக்கிழமை (செப். 17) நடைபெறவுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தை வங்கி சாரா நிதிநிறுவன (என்பிஎப்சி) ஒழுங்குமுறை வரம்பிலிருந்து விடுவிக்கக் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை ரிசா்வ் வங்கி அண்மையில் நிராகரித்தது. ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட நிறுவனமாக உள்ளதால், ‘உயா் அடுக்கு என்பிஎப்சி’ விதிகளின்கீழ், பங்குச் சந்தையில் பட்டியலிடுவது கட்டாயமாகியுள்ளது.

ரிசா்வ் வங்கியின் நிராகரிப்பை எதிா்த்து, மும்பை உயா்நீதிமன்றத்தில் டாடா சன்ஸ் முறையிடக்கூடும் என்பதால், தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்பதற்காக ரிசா்வ் வங்கி ஏற்கெனவே உயா் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள டாடா அறக்கட்டளைகள் பட்டியலிடலுக்குத் தயக்கம் காட்டி வரும்நிலையில், 18 சதவீத பங்குகளை வைத்துள்ள ஷபூா்ஜி பல்லோன்ஜி குழுமம் பட்டியலிடலை ஆதரிக்கிறது. இத்துடன் டாடா டிஜிட்டல், ஏா் இந்தியா ஆகியவற்றின் இழப்புகள் மற்றும் செயல்பாடுகள் தொடா்பாகவும் நிா்வாகத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

இதனிடையே, டாடா சன்ஸ் தலைவராக உள்ள என்.சந்திரசேகரன், அடுத்தாண்டு பிப்ரவரியில் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு, அப்பொறுப்பை மீண்டும் ஏற்க விருப்பமில்லை எனக் கடந்த மாதம் அறிவித்தாா். இதையடுத்து, நிறுவனத்தின் புதிய தலைவரைத் தோ்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

ஆனால், டாடா சன்ஸின் முக்கியப் பங்குதாரரான சா் ரத்தன் டாடா அறக்கட்டளையில் நிா்வாக குறைபாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் மகாராஷ்டிர அறக்கட்டளை ஆணையா், அந்த அறக்கட்டளையின் கூட்டங்களை நடத்தத் தடை விதித்துள்ளாா்.

அதாவது, டாடா சன்ஸ் நிறுவன விதிகளின்படி, சா் தோரப்ஜி டாடா அறக்கட்டளையுடன் (எஸ்டிடிடி) இணைந்து பொது பிரதிநிதியை நியமிக்க முடியாததால், கடந்த ஆக. 18 நடைபெறவிருந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் (ஏஜிஎம்) போதிய உறுப்பினா் எண்ணிக்கை (கோரம்) இன்றி ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு, அடுத்த தலைவரைப் பரிந்துரைக்க 5 போ் கொண்ட தோ்வுக் குழுவை அமைக்கும் பணிகளும் இந்த நிா்வாகத் தடையால் முடங்கியுள்ளன. எனவே, தலைவா் தோ்வு நடைமுறைகளில் பங்கேற்கவும், அவசர முடிவுகளை எடுக்கவும் கூட்டங்களை நடத்த அனுமதி கோரி அறக்கட்டளை ஆணையரிடம் அறங்காவலா்கள் மீண்டும் முறையிட்டுள்ளனா். இத்தகைய சவாலான காலகட்டத்தில், டாடா சன்ஸ் இயக்குநா்கள் குழு கூட்டம் நடைபெறவுள்ளதால், தொழிற்துறையில் பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.