விருதுநகர் அருகே ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மனைவி தேவகி(37). குடும்பத்தினருடன் பிப்ரவரி 17 இல் சாத்தூர் வச்சக்கரப்பட்டியில் உறவினரின் திருமணத்திற்கு சென்றார். நிகழ்ச்சியை முடித்து காரில் வீடுதிரும்பும் போது, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் காரில் இருந்தவர்கள் காயமடைந்தனர். அதில் பலத்த காயமடைந்த தேவகி, மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மூளை நரம்பியல் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஞாயிற்றுக்கிழமை காலை தேவகியின் மூளை செயல் இழந்தது உறுதிசெய்யப்பட்டது. மூளைச்சாவு அடைந்த தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் அளிக்கலாம் என கிருஷ்ணகுமார் மருத்துவர்களிடம் தெரிவித்தார். மருத்துவமனை நிர்வாகம் சார்பில், தமிழக அரசிடம் அனுமதி பெறப்பட்டது. மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் தலைமையில், தேவகியின் உடல் உறுப்புகளைப் பெற 5 மணி நேரம் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
இதில் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்த இரு நோயாளிகளுக்கு ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பொருத்தப்பட்டன. திருநெல்வேலி கிட்னி கேர் சென்டரில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









