குற்ற நகரமாக மாறும் தூங்கா நகரம்!
தூங்கா நகரம் என்ற பெருமையை பெற்ற மதுரை மாநகர் குற்ற நகரமாக மாறுவதை, போலீஸார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தூங்கா நகரம் என்ற பெருமையை பெற்ற மதுரை மாநகர் குற்ற நகரமாக மாறுவதை, போலீஸார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மக்கள்தொகை பெருக்கம், நவீன தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று தமிழகத்தின் மிக முக்கிய பெரு நகரங்களில் ஒன்றாக மதுரை இருந்து வருகிறது. பல்வேறு வளர்ச்சிகள் ஒருபுறம் வளர்ந்து வரும் அதேநேரத்தில், குற்றச் செயல்களும் அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.
மதுரையின் பாரம்பரிய கலைச்சின்னங்கள், தமிழர்களின் பெருமைகளை உணர்த்திக் கொண்டிருக்கும் சிறப்புகளை அறிந்துகொள்ள உள்ளூர், வெளியூர் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் வெளியூரைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
மதுரை மாநகரில் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை, பசுமலை தியாகராஜர் காலனியை சேர்ந்த ஐயப்பன் (35), கீரைத்துறை காமராஜர்புரம் எம்.எஸ். பாண்டியன், எல்லீஸ் நகர் ஆசைத்தம்பி (45), அய்யனார் காலனி சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது மதுரை மக்களை மட்டுமின்றி, காவல் துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெரும்பாலான கொலைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி, முன்விரோதம், தொழில் போட்டி போன்றவைகளால் நிகழ்ந்துள்ளன. பூட்டிய வீடுகளில் திருட்டு, நடந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரைத் தாக்கி சங்கிலி பறிப்புச் சம்பவங்களும் வேதனையளிக்கும் வகையில் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் மதுரை நகரிலுள்ள வீடுகளில் மட்டும் 3,319 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. இவற்றில் 1,115 பவுன் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 2015 ஜனவரி 1 முதல் மாநகர ஊரகக் காவல் எல்லையில் இருந்த திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், கூடல்புதூர் காவல் நிலையங்கள், ஊமச்சிக்குளம், சிலைமான் உள்ளிட்ட புறநகர் காவல் நிலையங்களின் சில பகுதிகள் நகர காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டன. இதன் பின்னரும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்தன.
தற்போது, மதுரை மாநகரில் தினமும் திருட்டு என்பது வாடிக்கையாகிவிட்டது. 2017 இல் வீடுகளில் 1,459 பவுன் நகைகள் திருடு போனதாக 159 வழக்குகள் பதிவாகின. கடந்த 2018 இல் 1,859 பவுன் நகைகள் திருடப்பட்டதாக 185 வழக்குகள் பதிவாகின. 2019 பிப்ரவரியில் நரிமேட்டில் நகை அடகு கடையில் 1,500 பவுன் நகைகள், ரூ.9 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட வழக்கில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை.
அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது: விரிவாக்கப் பகுதிகளில் அதிகம் திருட்டு நடக்கக் காரணம் வெளியூர் செல்பவர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிப்பதில்லை.
அவ்வாறு தெரிவித்தால் வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை இலவசமாகப் பொருத்தி கண்காணிப்போம். அப்பகுதியில் ரோந்தும் செல்வோம். இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் திருட்டு அதிகரித்துள்ளது. சமீபத்தில் எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்துக்குள்பட்ட சில வீடுகளில் திருடப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பவுன் நகைகள் மீட்கப்பட்டன. 2018 இல் நகரில் மொத்தம் 685 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. 2017 இல் 430 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. சில வழக்குகளில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுபவர் என்றார்.
இதுதொடர்பாக மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியது: மாநகரில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சோதனைச் சாவடிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநகரில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்கள் விரைவில் குறைக்கப்படும் என்றார்.
மதுரை மாநகரத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களால் மக்கள் தைரியமாக இரவில் வெளியில் வருவதற்கே அச்சம் அடைந்துள்ளனர். எந்த நேரத்தில், எந்த இடத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வரும் மக்களின் பயத்தை போக்க, காவல்துறை இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதுடன், மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ வழி செய்ய வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...