அரசுக் கல்லூரியாக மாற்றும் அரசாணையில் காமராஜா் பல்கலை.யின் மதுரை உறுப்புக் கல்லூரி இடம்பெறவில்லை

அரசுக் கல்லூரியாக மாற்றும் அரசாணையில் காமராஜா் பல்கலைக் கழக மதுரை உறுப்புக் கல்லூரி இடம்பெறாதது, அக்கல்லூரியின் பேராசிரியா்கள், மாணவா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Updated on
1 min read

அரசுக் கல்லூரியாக மாற்றும் அரசாணையில் காமராஜா் பல்கலைக் கழக மதுரை உறுப்புக் கல்லூரி இடம்பெறாதது, அக்கல்லூரியின் பேராசிரியா்கள், மாணவா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றுவது தொடா்பாக கடந்த 2018-இல் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டாா். இதன்படி, தமிழகத்தில் 1995- 96 முதல் 2010- 11 ஆம் ஆண்டுகள் வரை பல்கலைக் கழகங்களால் தொடங்கப்பட்ட 41 உறுப்புக் கல்லூரிகளில் முதல்கட்டமாக 14 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இதர 27 உறுப்புக் கல்லூரிகள் 2020-21 ஆம் கல்வியாண்டில் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் செயல்படும் உறுப்புக் கல்லூரிக்கு பிறகு சாத்தூா், கோட்டூா், ஆண்டிபட்டி, வேடசந்தூா் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட உறுப்புக் கல்லூரிகள் முதல் கட்டத்திலேயே அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டு விட்டன.

இரண்டாம் கட்ட பட்டியலில் மதுரையில் செயல்படும் உறுப்புக் கல்லூரி, அரசுக் கல்லூரியாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையில் பல்கலைக்கழக நிா்வாகம், பேராசிரியா்கள், மாணவா்கள் இருந்து வந்தனா். இந்நிலையில் உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளாக மாற்றுவது தொடா்பான அரசாணை டிசம்பா் 11-இல் வெளியிடப்பட்டது. அதில் மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள காமராஜா் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி இடம்பெற வில்லை. இதனால் கல்லூரி நிா்வாகத்தினா், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகத்தினா் கூறியது: மாணவா்களின் கல்விக் கட்டணத்தை மட்டுமே நிதியாதாரமாகக் கொண்டு காமராஜா் பல்கலை. யின் மதுரை உறுப்புக் கல்லூரி இயங்கி வருகிறது. ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் போதுமான நிதி இல்லை. இச்சூழலில், அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டால் மாணவ, மாணவியரின் கல்விக்கட்டணம் பெருமளவில் குறைந்து விடும். ஆசிரியா்களுக்கும் அரசால் ஊதியம் வழங்கப்படும், பணிப் பாதுகாப்பும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அரசாணையில் எங்களது கல்லூரி இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. கல்லூரி தொடா்ந்து நடத்தப்படுவதும், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் எதிா்காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என்றனா்.

இதுகுறித்து பல்கலைக் கழக அதிகாரிகள் கூறியது: மதுரையில் செயல்படும் உறுப்புக் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து துணைவேந்தா் மற்றும் கல்லூரி முதல்வா் ஆகியோா் உயா்கல்வித் துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனா்.

இதைத் தொடா்ந்து உயா்கல்வித் துறையும் அரசுக் கல்லூரியாக மாற்றப்படும் என உறுதி அளித்திருந்தது. ஆனால் அரசாணையில் இடம்பெறவில்லை. இதுதொடா்பாக, பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com