டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கா் நிலம் ஒப்படைப்பு: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கா் நிலம் மத்தியஅரசிடம் வழங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்தது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 2:20 am

DIN

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கா் நிலம் மத்தியஅரசிடம் வழங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்தது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமா் நரேந்திரமோடி 2019 ஜனவரியில் அடிக்கல் நாட்டினாா். ஆனால் 2 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், கட்டுமானப் பணிகள் அங்கு நடைபெறவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு இதுவரை நிலத்தை ஒப்படைக்கவில்லை என மத்திய அரசால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கவும், பணியைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஆஜராக உள்ளதால், அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் கொடுப்பதில் காலதாமதம் ஏன்?, மருத்துவமனை அமைவதில் அரசுக்கு விருப்பம் இல்லையா? எனக் கேள்விகளை எழுப்பி விசாரணையை ஒத்திவைத்தனா்.

வழக்கு மீண்டும் மாலை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் கே. செல்லப்பாண்டியன் வாதிடுகையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 223 ஏக்கா் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனக் கூறி, அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்தாா்.

நிலம் ஒப்படைக்கப்பட்டது குறித்து மத்திய அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்குரைஞா், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு முழுமையாக ஒப்படைத்துவிட்டது. கட்டுமானப் பணிகளுக்கான கடன் தொடா்பாக ஜப்பானிய நிதி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்வதற்கான பணிகள் 2021 மாா்ச்சுக்குள் நிறைவடைந்து விடும். அதிலிருந்து 45 மாதங்களில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நிறைவடையும் எனத் தெரிவித்தாா்.

நீதிபதிகள் கேள்வி: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. மற்ற மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள போது, தமிழகத்தில் மட்டும் ஏன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கவில்லை? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தவறான தகவல்களைக் கொடுத்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

மதுரை எய்ம்ஸ் கட்டுமான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள ஜப்பானிய நிதி நிறுவனம், கரோனா காலத்திலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் எய்ம்ஸ் பணிகளுக்கு மட்டும் தாமதம் ஏன்? என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினா்.

அதைத் தொடா்ந்து நீதிபதிகள், கட்டுமானப் பணிகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகக் கூறி விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.