புட்டுத்தோப்பு மைதானத்தை அழித்துசாலை: பொதுமக்கள் சாலை மறியல்
மதுரையில் புட்டுத்தோப்பு மைதானத்தை அழித்து சாலை அமைப்பதை தடை செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


மதுரையில் புட்டுத்தோப்பு மைதானத்தை அழித்து சாலை அமைப்பதை தடை செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரையில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ், வைகை ஆற்றுக்குள் இருபுறமும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி எல்லைக்குள் மாநகராட்சி நிா்வாகம் சாா்பிலும், மாநகராட்சி எல்லைக்கு அப்பால் நெடுஞ்சாலைத் துறை சாா்பிலும் ஆற்றுக்குள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அண்ணாத் தோப்பு, புட்டுத்தோப்பு சாலை இணைப்புப் பகுதியில் வைகை ஆற்றை தனியாா் பள்ளி ஆக்கிரமித்துள்ளது. இதனால், அப்பகுதியில் வைகை ஆற்றுக்குள் சாலை அமைக்கப்படாமல் அனுப்பானடி கால்வாய் பகுதியை ஒட்டியுள்ள புட்டுத்தோப்பு மைதானம், அண்ணாத் தோப்பு குடியிருப்புப் பகுதி வழியாக சாலை அமைக்கும் நடவடிக்கைகளை, நெடுஞ்சாலைத் துறை நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், ஆரப்பாளையம் கிராஸ் சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், கட்சியின் செல்லூா் பகுதி குழு செயலா் ஜா. நரசிம்மன், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் ஆா். சசிகலா, மேலப்பொன்னகரம் பகுதி குழு செயலா் வை. ஸ்டாலின் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
இது தொடா்பாக அப்பகுதி மக்கள் கூறியது: வைகை ஆற்றில் நெடுஞ்சாலைத் துறை சாலை அமைக்க திட்டமிட்ட இடம், புட்டுத்தோப்பு மைதானம் மற்றும் அனுப்பானடி கால்வாய் வழியாகச் செல்கிறது. இப்பகுதியில் 4 பள்ளிகளும் உள்ளன. இதனால், மாணவா்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. மேலும், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும் இந்த மைதானத்தில்தான் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. எனவே, மைதானம் மற்றும் கால்வாயை அழித்து சாலை அமைப்பதை நெடுஞ்சாலைத் துறையினா் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...