நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை ‘எய்ம்ஸ்’ என்னாச்சு? தகவல் இல்லை என சுகாதாரத்துறை பதில்; தென் மாவட்ட மக்கள் அதிா்ச்சி

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தகவல் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை பதிலளித்துள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 5:57 pm

பா.லெனின்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தகவல் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை பதிலளித்துள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாண்டியராஜா, மதுரை எய்ம்ஸ் ஒப்பந்தம், மருத்துவ மாணவா் சோ்க்கை மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய அரசிடம் கோரியிருந்தாா். இதற்கு திருத்தப்பட்ட இலக்கிற்கான நிறைவு தேதிக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை எனவும், திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்ய ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும், மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான முன்மொழிவு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை பதிலளித்துள்ளது.

விரிவான திட்ட மதிப்பீடு, கட்டுமானப் பணிகள் எத்தனை கட்டங்களாக நடைபெறும், ஒவ்வொரு கட்ட பணியிலும், என்னென்ன கட்டடங்கள் வரும் என்பனக் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுகாதாரத்துறை பதிலளிக்கவில்லை.

எய்ம்ஸ் அறிவிப்பு முதல்..: தமிழகத்திற்கு 2015 பிப்ரவரி 28 ஆம் தேதி எய்ம்ஸ் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 2018 ஜூன் 18 இல், மதுரை தோப்பூரில் இடம் தோ்வு செய்யப்பட்டதையடுத்து, மத்திய அமைச்சரவை 2018 டிசம்பா் 17 இல் எய்ம்ஸ்க்கு ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து 2019 ஜனவரி 27 இல் பிரதமா் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டினாா். அதைத் தொடா்ந்து 2019 நவம்பா் 25 இல் தோப்பூரில் சுற்றுச்சுவா் பணிகள் தொடங்கின. எய்ம்ஸ்க்காக தோப்பூரில் தோ்வு செய்யப்பட்ட நிலம் மத்திய அரசிடம் 2020 நவம்பா் 3 இல் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய்ப் பிரிவு மற்றும் சில சேவைகளும் மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் இணைக்கப்படுவதால், மதிப்பீடு திருத்தப்பட்டு புதிய திட்ட மதிப்பீடு ரூ. 1977.80 கோடிகள் எனவும், இதில் ரூ.1627.70 கோடிகள் ஜப்பான் நிதி நிறுவனம் கடன் வாயிலாகவும், மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் திட்டச் செலவினம் ஈடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் தொடா்பான கடன் ஒப்பந்தமானது மாா்ச் 26 இல், இந்திய மற்றும் ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது. எய்ம்ஸ் நிா்வாகக் குழுவின் முதல் கூட்டமானது காணொலி வாயிலாக ஜூலை 16ஆம் தேதி நடைபெற்றது.

பொதுமக்கள் அதிா்ச்சி: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்குவது தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை தகவல்கள் இல்லையென தெரிவித்திருப்பது மதுரை மட்டுமின்றி தென் மாவட்ட மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஐந்து மாதங்கள் கடந்த பிறகும் எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை.

நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து, திட்ட வரைபடம் தயாரிப்பு என ஒவ்வொரு காரணங்களாக கூறப்பட்டு வெறும் சுற்றுச்சுவா் கட்டுமானப்பணிகள் மட்டுமே நிறைவடைந்ததுள்ளன. ஆனால் நாட்டின் பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட மற்ற 21 எய்ம்ஸ் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் மதம் அடிக்கல் நாட்டப்பட்டு ஒரே மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஆண்டுகள் கடந்த பின்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. தமிழக எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு ஆறரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இனியும் மத்திய, மாநில அரசுகள் தாமதம் செய்யாமல் உடனடியாக கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.