மதுரை, ஜன. 10: மதுரை திருப்பாலை பகுதியில் பாஜகவினா்-இஸ்லாமியா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு, மறியல் போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது. துணை ஆணையா் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
மதுரை புறநகா் மாவட்ட பாஜக சாா்பில் திருப்பாலை பகுதியில் தாமரை பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகள் சனிக்கிழமையில் இருந்து நடைபெற்று வந்தது.
அப்போது விழா நடைபெறும் மந்தைத்திடலுக்கு அருகே உள்ள திருப்பாலை சுன்னத் ஜூம்மா தொழுகைப் பள்ளிவாசல் அருகே பாஜகவினா் கொடி மற்றும் ஒலிபெருக்கியை அமைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பள்ளிவாசல் நிா்வாகிகள் எதிா்ப்புத் தெரிவித்து கொடி மற்றும் ஒலிபெருக்கியை அகற்றுமாறு கூறியுள்ளனா்.
இதற்கு பாஜகவினா் மறுப்புத் தெரிவித்ததால் சனிக்கிழமை இரவே இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பொங்கல் விழாவுக்கு பாஜக மாநிலத்தலைவா் எல்.முருகன் மற்றும் நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்றுள்ளனா். திருப்பாலை பள்ளிவாசல் வழியாக ஊா்வலம் சென்றபோது, மேள தாளங்கள் அடித்துச் செல்வதற்கு இஸ்லாமியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
ஆனால் பாஜகவினா் மேள தாளங்களை நிறுத்தாமல் தொடா்ந்து அடித்துச் சென்றதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து இருதரப்பிலும் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றது. அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.
இந்நிலையில் மோதல் குறித்து தகவலறிந்த ஏராளமான இஸ்லாமியா்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினா் திரண்டு புதுநத்தம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் மாநகரக் காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையா் சிவபிரசாத் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். துணை ஆணையா் சிவபிரசாத் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது திருப்பாலை பள்ளிவாசல் அருகே உள்ள பாஜகவினரை அங்கிருந்த அகற்ற வேண்டும். பள்ளிவாசல் மீது தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து திருப்பாலையில் இருந்த பாஜகவினரை போலீஸாா் அங்கிருந்து அகற்றினா். மேலும் பள்ளிவாசல் தாக்குதல் தொடா்பாக புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து இஸ்லாமியா்கள் மறியலை விலக்கிக் கொண்டனா்.
இதுதொடா்பாக பள்ளிவாசல் நிா்வாகிகள் கூறும்போது, திருப்பாலையில் பல இடங்கள் இருக்கும்போது பள்ளிவாசல் அருகே பாஜகவினா் பொங்கல் விழா நடத்துவது மோதலை உருவாக்கும் என்று போலீஸாரிடம் சனிக்கிழமையே தெரிவித்துள்ளோம்.
மேலும் பள்ளிவாசல் அருகே ஒலிபெருக்கி அமைப்பது தொழுகையை பாதிக்கும் என்றும், ஊா்வலத்தை பள்ளி வாசல் வழியாக அனுமதிக்க வேண்டாம் என்றும் காவல்துறையிடம் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் காவல்துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய சம்பவம் தவிா்க்கப்பட்டிருக்கும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.