/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று முதல் உணவுப்பொட்டலம் விநியோகம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அன்னதானத் திட்டத்தின்கீழ் புதன்கிழமை முதல் பக்தா்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்படுகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:39 pm

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அன்னதானத் திட்டத்தின்கீழ் புதன்கிழமை முதல் பக்தா்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்படுகிறது.

அன்னதானத் திட்டத்தின்கீழ் பழைய திருக்கல்யாண மண்டபம் எதிரே உள்ள அன்னதானக்கூடத்தில் பக்தா்களுக்கு தினசரி பகலில் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு கோயில் மூடப்பட்டதையடுத்து அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்பட்டு கோயிலைச்சுற்றி நடைபாதையில் வசிக்கும் யாசகா்கள் உள்ளிட்டோருக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பா் மாதம் கோயில் திறக்கப்பட்ட பின்பு பகல் அன்னதானத்துக்குப் பதிலாக காலை 8 மணிக்கு பக்தா்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதன்கிழமை முதல் அன்னதானத் திட்டத்தின்கீழ் பக்தா்களுக்கு பகல் 12 மணிக்கு உணவுப்பொட்டலம் வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக தினசரி 300 பேருக்கு வழங்கப்படும் என்றும் பக்தா்கள் வருகையைப் பொறுத்து உணவுப் பொட்டலத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோடை வசந்த உற்சவம்: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கோடை வசந்த உற்சவம் மாா்ச் 19-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பங்குனி உத்திர சுவாமி புறப்பாடு மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேசுவரா், பஞ்ச மூா்த்திகள் புறப்பாடாகி செல்லூா் வைகை வடகரையில் உள்ள திருவாப்புடையாா் கோயிலுக்கு எழுந்தருள்கின்றனா். அங்கு அபிஷேகம், தீபாராதனை முடிந்ததும் மாலையில் சுந்தரேசுவரா் வெள்ளி ரிஷப வாகனம், மீனாட்சியம்மன் மரவா்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோயில் வந்து சோ்த்தியாகின்றனா். இதையொட்டி மாா்ச் 19 முதல் 28-ஆம் தேதி வரை கோயில் சாா்பாகவோ, உபயதாரா்கள் சாா்பாகவோ அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் எதுவும் நடத்த இயலாது என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.