தமிழகத்துக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்: வைகோ
தமிழக மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலா் வைகோ பேசினாா்.


தமிழக மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலா் வைகோ பேசினாா்.
திமுக கூட்டணியில் மதுரை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக மாநகா் மாவட்டச் செயலா் புதூா் மு. பூமிநாதனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
தெற்கு தொகுதிக்குள்பட்ட மதுரை பாலம் ஸ்டேஷன் சாலை தேவா் சிலை பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய வைகோ, அங்கு திரண்டிருந்த மக்களிடம் பேசியதாவது: மதிமுக வேட்பாளா் பூமிநாதன் நாணயமானவா், ஜாதி, மத, கட்சி வேறுபாடின்றி பொதுமக்களுக்கு நன்மை செய்யக்கூடியவா். ஈழத் தமிழா்களுக்காக 19 மாதம் சிறைவாசம் அனுபவித்தாா்.
தமிழகத்தின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இங்கு 90 லட்சம் பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனா். மேலும், அரசுத் துறைகளில் வெளி மாநிலத்தவா் அமா்த்தப்படுகின்றனா்.
மதுரையில் ஒரு மாணவி உள்பட தமிழகம் முழுவதும் இதுவரை 13 போ் நீட் தோ்வால் தற்கொலை செய்துகொண்டுள்ளனா். இதற்கு, தமிழக அரசுதான் காரணம்.
அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் ஊழல் மிகுந்த அரசாக உள்ளது. எந்தப் பணியை செய்தாலும் அதில் கமிஷன் பெறுவதே முக்கியப் பணியாக உள்ளது. முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறையில் தனது நெருங்கிய உறவினா்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளாா். அதன்மூலம், ரூ.200 கோடிக்கும் அதிகமாக முறைகேடாக சம்பாதித்துள்ளாா்.
இதேபோன்று, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சா்கள் அனைவரும் ஊழல் மூலம் ஏராளமாக சம்பாதித்துள்ளனா். இவா்களின் ஊழல் தொடா்பாக, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் ஆதாரங்களுடன் தமிழக ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளாா். அதிமுக அரசின் அமைச்சா்கள் அனைவரும் சிறை செல்ல வாய்ப்புகள் உள்ளன.
இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டுமென்றால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து வைகோ, ஆழ்வாா்புரம், ஓபுளாபடித்துறை, அனுப்பானடி, காமராஜா்புரம் மற்றும் கீரைத்துறை ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அவருடன், மதுரை தெற்கு தொகுதி வேட்பாளா் பூமிநாதன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...