குடிநீா், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்: மாநகராட்சி ஆணையா் தகவல்
முல்லைப் பெரியாறு அணை லோயா் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீா் கொண்டு வரும் திட்டப் பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.


முல்லைப் பெரியாறு அணை லோயா் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீா் கொண்டு வரும் திட்டப் பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
மதுரை மாநகராட்சியில் புதிய ஆணையராக அவா் புதன்கிழமை பொறுப்பேற்றாா். இதையடுத்து, செல்லூரில் உள்ள மாநகராட்சி வாகனப் பணிமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும் மேல மாரட் வீதி, மேல மாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணியைப் பாா்வையிட்டாா். மாநகராட்சி பிரதான அலுவலகமான அண்ணா மாளிகையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முல்லைப் பெரியாறு அணை லோயா் கேம்ப் பகுதியில் மதுரை மாநகராட்சிக்கு குழாய் வழியாக குடிநீா் கொண்டு வரும் திட்டத்தையும், மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளையும் விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
குடிநீா் குழாய்கள், பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெறும் பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். மாநகரச் சாலைகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சாலைகளில் தேங்கும் மண், கட்டடக் கழிவுகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன. மேம்பாலங்களில் மின்விளக்குகள் அமைப்பதோடு, நகரின் அடையாளச் சின்னங்களாக இருக்கும் பகுதிகளை முறையாகப் பராமரித்து நகரை அழகுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாநகராட்சியின் நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், குடியிருப்போா் சங்கங்கள், வணிகா் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி நகரின் முக்கியப் பகுதிகளில் வாகன நிறுத்தும் இடங்களை முறைப்படுத்தப்படும்.
மாநகராட்சிக்கு வரவேண்டிய சொத்து வரியை வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்படவுள்ளது. நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளவா்களிடம் இருந்து வரிநிலுவையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நகரப் பகுதியை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் வகையில் கூட்டுத் துப்புரவுப் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...