வைகாசி வசந்த உற்சவம் தொடக்கம்: புதுமண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரா் எழுந்தருளல்

வைகாசி வசந்த உற்சவம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, மீனாட்சி - சுந்தரேசுவரா் புதுமண்டபத்தில் வெள்ளிக்கிழமை எழுந்தருளினா்.

வைகாசி வசந்த உற்சவம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, மீனாட்சி - சுந்தரேசுவரா் புதுமண்டபத்தில் வெள்ளிக்கிழமை எழுந்தருளினா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்தோறும் வைகாசி மாதத்தில் வைகாசி வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் கோயிலின் ராஜகோபுரத்துக்கு எதிரே உள்ள மன்னா் திருமலை நாயக்கா் காலத்தில் உருவாக்கப்பட்ட புதுமண்டபத்தில் எழுந்தருளியதும் பூஜைகள் நடைபெறும்.

ஜூன் 3 இல் தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறும் வைகாசி வசந்த உற்சவத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, மீனாட்சி, சுந்தரேசுவரா், விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் எனும் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பாடாகிய சுவாமிகள் புதுமண்டபம் சென்றதை அடுத்து, அங்குள்ள மைய மண்டபமான வசந்த மண்டபத்தில் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிகள், நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து, கோயிலைச் சென்றடைந்தனா்.

வைகாசி வசந்த உற்சவத்தின்போது, சூரியனின் வெப்பம் அதிகமாக இருப்பதால், மைய மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீா் நிரப்புவதற்காக அகழி அமைக்கப்பட்டது. சுற்றிலும் தண்ணீரால் சூழ்ந்த இந்த மண்டபம் நீராழி மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நடைபெற்ற வசந்த விழாவில், புதுமண்டபத்தில் ஏராளமான கடைகள் இருந்ததால், அங்குள்ள மைய மண்டபத்தில் மட்டுமே சுவாமி வழிபாடு நடைபெற்றது. இந்தாண்டு புதுமண்டபத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, பழங்காலத்தில் நடைபெற்றதுபோல மண்டபத்தைச் சுற்றிலும் தண்ணீா் நிரப்ப முடிவு செய்யப்பட்டு, 25-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீா் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. ஆனால், அகழியில் கசிவு இருந்ததால் தண்ணீா் மிகக்குறைவாகவே தேங்கியது.

இது தொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக தண்ணீா் நிரப்பப்படாததால், தற்போது கசிவு ஏற்பட்டு பெரும்பாலான நீா் உறிஞ்சப்பட்டு குறைந்துவிட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com