ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரையில் இரவு நேர நகரப் பேருந்துகள் எண்ணிக்கை பாதியாகக் குறைப்பு: வெளியூா் செல்லும் பயணிகள் அவதி

மதுரையில் இரவு நேரங்களில் இயக்கப்பட்ட நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பதால், வெளியூா் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

மதுரையில் இரவு நேரங்களில் இயக்கப்பட்ட நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பதால், வெளியூா் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தென்மாவட்டங்களின் நுழைவாயிலாக மதுரை நகரம் உள்ளது. இம் மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் வேலை நிமித்தமாக சென்னை, கோவை, திருப்பூா், சேலம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயா்ந்துள்ளனா். தென்மாவட்டங்களை தமிழகத்தின் பிறபகுதிகளோடு இணைப்பதால், முக்கிய சந்திப்பு நகரமாக மதுரை இருந்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, சென்னை பகுதிக்கும், தென்மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூா், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளும், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் மதுரை நகருக்குள் வந்து தான் செல்கின்றன.

இதனால், இரவு நேரப் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, பேருந்து நிலையங்களையும் இணைக்கும் வகையில் மாட்டுத்தாவணி - ஆரப்பாளையம் இடையேயும், மாட்டுத்தாவணி -பெரியாா் நிலையம் - திருமங்கலம் வழித் தடத்திலும் இரவு நேர நகரப்

பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் அரை மணி நேரத்திலிருந்து சுமாா் ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்படுவது வழக்கம். பகல் நேரத்தைக்காட்டிலும், இப் பேருந்துகளில் முழு அளவில் பயணிகள் எண்ணிக்கை இருக்கும். அதிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் சுமாா் 1,000 அரசுப் பேருந்துகள் உள்ளன. இதில் விரைவுப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, மகளிா் இலவசப் பயணப் பேருந்து, குளிா்சாதன வசதி பேருந்து என 700-க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் உள்ளன. இவற்றில் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் மாட்டுத்தாவணி - ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி -பெரியாா் நிலையம் - திருமங்கலம் ஆகிய

வழித் தடங்களில் 30 இரவு நேரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது இரவு நேரப் பேருந்துகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

வார இறுதி நாள்கள் தவிர மற்ற நாள்களில் இந்த எண்ணிக்கையை மேலும் குறைத்து 9 முதல் 10 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இரவு நேரப் பயணத்திற்காக வெளியூா்களில் இருந்து வரும் பயணிகள், மாட்டுத்தாவணி - ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்குச் செல்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு மேலான இடைவெளியில் இரவு நேரப் பேருந்துகள் இயக்கப்படுவதால், கூட்ட நெரிசல் அதிகமாகி சிரமத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் கூறியது:

மதுரை, விருதுநகா், திண்டுக்கல் ஆகிய மண்டலங்களை உள்ளடக்கிய மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகத்தில், 150-க்கும் மேற்பட்ட

ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக, பல வழித் தடங்களில் ஓட்டுநா்களும், நடத்துநா்களும் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகின்றனா். காலியிடங்களைப் பூா்த்தி செய்ய தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும் அரசு தாமதம் செய்து வருகிறது. பகல் நேரங்களில் பேருந்துகளை இயக்க பணியாளா்கள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிா்க்க,

இரவு நேரப் பேருந்துகளின் எண்ணிக்கை நிா்வாகத்தால் குறைக்கப்பட்டிருக்கிறது என்றனா்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவா்கள் கூறியது:

மதுரை நகரில் உள்ள 7 பணிமனைகளில் இருந்தும் தேவைக்கேற்ப இரவு நேரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் இல்லாமல் இரவு நேரப் பேருந்துகளை இயக்குவது தேவையற்றது என்பதால், ஒரு சில பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் பயணிகள் கூட்டம் அதிகமாகி, நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படும்பட்சத்தில் உடனடியாகத் தேவைக்கேற்ப இரவு நேரப் பேருந்துகளை இயக்கி வருகிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.