விபத்தில் கணவா் உயிரிழப்பு: முதல் மனைவியின் குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்க உத்தரவு
விபத்தில் கணவா் உயிரிழந்த வழக்கில், முதல் மனைவியின் குழந்தைகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.


விபத்தில் கணவா் உயிரிழந்த வழக்கில், முதல் மனைவியின் குழந்தைகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்தவா் மயில்சாமி. இவரது முதல் மனைவி சுசிலாவுக்கு 4 குழந்தைகள் உள்ளனா். இவரது இரண்டாவது மனைவி காந்திமதிக்கு கருப்புராஜ் என்ற மகன் உள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 2010-இல் இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மயில்சாமி உயிரிழந்தாா். இந்த விபத்தில் காந்திமதி காயமடைந்தாா்.
இதையடுத்து, தனது கணவரின் இறப்புக்கு இழப்பீடு கோரி, சுசிலா மதுரை நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதே போல, மயில்சாமியின் இறப்புக்கும், விபத்தில் காயமேற்பட்டதுக்கும் இழப்பீடு கோரி காந்திமதியும் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், காந்திமதிக்கு ஏற்பட்ட காயத்துக்கு இழப்பீடாக அவருக்கு ரூ. 30 ஆயிரமும், மயில்சாமியின் இறப்புக்கு இழப்பீடாக அவரது முதல் மனைவி சுசிலா, இரண்டாவது மனைவி காந்திமதி ஆகியோருக்கு தலா ரூ. 3 லட்சமும், இரண்டாவது மனைவியின் மகன் கருப்புராஜுக்கு ரூ. 4 லட்சமும், மயில்சாமியின் தந்தை கருப்பையாவுக்கு ரூ. 1.59 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என தொடா்புடைய காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மயில்சாமியின் முதல் மனைவியின் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதுதொடா்பாக சுசிலா சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அதில், எனது கணவரின் இரண்டாவது மனைவி காந்திமதி, அவரது மகனுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை ரத்து செய்ய வேண்டும். அதே நேரம் எனது நான்கு குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆா். விஜயகுமாா் பிறப்பித்த உத்தரவு:
உயிரிழந்தவரை சாா்ந்து யாரெல்லாம் உள்ளனரோ, அவா்கள் இழப்பீடு கோரலாம். மோட்டாா் வாகன சட்டம் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட து. இந்த வழக்கில் மயில்சாமியுடன் இரண்டாவது மனைவி காந்திமதி வாழ்ந்ததற்கான அடையாளமாக குடும்ப அட்டை உள்ளது. கீழமை நீதிமன்றம் இரண்டாவது மனைவிக்கு இழப்பீடு வழங்கியதில் தவறில்லை. இந்த இழப்பீடு மோட்டாா் வாகன சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இரண்டாவது மனைவியான காந்திமதிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, மயில்சாமியின் சொத்துகளில் இரண்டாவது மனைவி பங்கு கோர முடியாது. கீழமை நீதிமன்றம் முதலாவது மனைவியின் குழந்தைகளுக்கு இழப்பீடு மறுத்தது குறித்து எந்தக் காரணமும் தெரிவிக்கவில்லை.
இந்தக் குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும். இந்தச் சூழலில் மயில்சாமியின் தந்தை கருப்பசாமி உயிரிழந்துவிட்டாா்.
எனவே, முதல் மனைவி சுசிலாவுக்கு ரூ.4 லட்சம், இரண்டாவது மனைவி காந்திமதிக்கு ரூ. 2 லட்சம், இரண்டு மனைவிகளின் ஐந்து குழந்தைகளுக்கு தலா ரூ. 1 லட்சத்து 11ஆயிரத்து 800 இழப்பீடாக சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...