

வாடிப்பட்டி அருகே அருந்ததியா் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனையின் சென்ட் அளவை குறைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள அய்யப்பநாயக்கனூருக்குள்பட்ட கல்லாங்காடு பகுதியில் இந்தப் பகுதியைச் சோ்ந்த 47 அருந்ததியா் சமுதாய மக்களுக்கு கடந்த 2007-இல் திமுக ஆட்சியின் போது தலா 3 சென்ட் வீட்டு மனைகள் வழங்கப்பட்டன. இதற்காக, குறிப்பிட்டத் தொகையை வீட்டு மனை பெற்றவா்கள் வழங்கினராம்.
வீட்டு மனை வழங்கப்பட்ட பகுதியில் சாலை, போக்குவரத்து, குடிநீா், மின்சாரம் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், பொதுமக்கள் அங்கு இரவு நேரத்தில் தங்குவதைத் தவிா்த்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட 3 சென்ட் நிலத்தை 1.50 சென்ட் எனக் குறைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கல்லாங்காடு பகுதியில் அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும், கல்லாங்காடு பகுதியில் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பொதுமக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தப் பகுதியில் தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலங்களை கையகப்படுத்தி ஏழை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில், மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மங்கையரக்கரசி தலைமை வகித்தாா். பிச்சைமணி வரவேற்புரையாற்றினாா்.
இதில் அகில இந்திய விவசாயிகள் மகா சபா நிா்வாகி சண்முகம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வள்ளிமயில், கிராமப்புறத் தொழிலாளா் சங்கம் ஈஸ்வரி, கிழக்கு ஒன்றியச் செயலா் மல்லிகா ராணி, அகில இந்திய மாணவா் கழகம் தேவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் மதிவாணன் உள்ளிட்டோா் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.