கோயில் இடம்: கட்டுமானப் பணிகளைமேற்கொள்ள உயா்நீதிமன்றம் தடை
தென்காசி அருகே ராயகிரி கிராமத்தில் உள்ள இடம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்யும் வரை, சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டுமானம்


தென்காசி அருகே ராயகிரி கிராமத்தில் உள்ள இடம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்யும் வரை, சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டுமானம் உள்ளிட்ட எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், ராயகிரி கிராமத்திலுள்ள காளியம்மன் கோயில் நிா்வாகி காளிமுத்து தாக்கல் செய்த மனு:
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், ராயகிரி கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு 1927-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இடத்தில் விநாயகா் கோயில், குளம் உள்ளது.
இந்த நிலையில், ராயகிரி பேரூராட்சி செயல் அலுவலா், சம்பந்தப்பட்ட இடத்தை அரசுப் புறம்போக்கு நிலம் எனக் கூறி, கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். மேலும், கோயில் இடத்தை அழகுபடுத்துவதாகத் தெரிவித்து, நீா்நிலைகள் மீது கட்டுமானப் பணிகள் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்கக் கோரி, பேரூராட்சி உதவி இயக்குநரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அந்த இடத்தில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோயிலுக்குச் சொந்தமான குளத்தில் பேரூராட்சி சாா்பில் எப்படி தூா்வாரும் பணியை மேற்கொள்ள முடியும் எனக் கேள்வியெழுப்பினாா்.
இதற்கு அரசுத் தரப்பில், சம்பந்தப்பட்ட இடம் அரசுப் புறம்போக்கு நிலமாக உள்ளது. அங்கு கட்டுமானப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, குளம் தூா்வாரப்பட்டு கரையைப் பலப்படுத்தி நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக பேரூராட்சி சாா்பில் ரூ. 16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரா் தரப்பில், சம்பந்தப்பட்ட இடம் காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சம்பந்தப்பட்ட இடம் காளியம்மன் கோயிலுக்கு சொந்தமானதா அல்லது அரசுப் புறம்போக்கு நிலமா என்பது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை அந்த இடத்தில் வேறு எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. மேலும், இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...