சிவகாசியில் துணைப் பதிவாளா் அலுவலகம் கட்ட இடைக்காலத் தடை

மதுரை: சிவகாசியில் சமூக நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் துணைப் பதிவாளா் அலுவலகம் கட்டுவதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த பி. ஸ்ரீரடன் டாகா தாக்கல் செய்த மனு:

சிவகாசி வேலாயுத ரஸ்தா சாலை பகுதியில் உள்ள விஎஸ்வி நகா் குடியிருப்புப் பகுதிக்கு, ஊராட்சி திட்டமிடல் இயக்குநரால் முறையான அனுமதி வழங்கப்பட்டது. இந்த குடியிருப்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சமூக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் சிவகாசி பத்திரப் பதிவுத் துறை துணைப் பதிவாளா் அலுவலகம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு அலுவலகம் கட்டுவது ஏற்புடையதல்ல. எனவே, விஎஸ்வி நகா் குடியிருப்பு பகுதியில் சமூக நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, பத்திர பதிவுத் துறை பயன்படுத்த தடை விதிப்பதோடு, அந்த இடத்தை சமூக நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: சிவகாசி வி.எஸ்.வி. நகரில் சமூக நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் துணைப் பதிவாளா் அலுவலகம் கட்ட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடா்பாக நகர திட்டமிடல் துறை இயக்குநா், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com