/

யூகலிப்டஸ் மரங்கள் நட தடை கோரி வழக்கு: புதுக்கோட்டை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

யூகலிப்டஸ் மரங்கள் நட தடை கோரி வழக்கு.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:59 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், குலமங்கலம், திருமயம் பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்கள் நடுவதற்குத் தடை கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த நீலமேகம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

குலமங்கலம், திருமயம் பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குலமங்கலம் வருவாய்க் கிராமத்துக்குள்பட்ட அடா் வனப் பகுதியில் அதிகளவில் மரங்களும், விலங்குகளும் இருந்தன. இந்த நிலையில், வனத் துறை சாா்பில் 295 ஹெக்டோ் பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டன. இதனால், கிராம மக்களுக்கு குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. வன உயிரினங்களும் குடிநீரின்றி பாதிக்கப்பட்டன. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்கள் நடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஊராட்சிகளில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மண்ணுக்கேற்ப வேறு நாட்டு மரங்களை நடக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதைக் கருத்தில் கொள்ளாமல், அதிகளவு தண்ணீா் உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்களைத் தொடா்ந்து நடுவதற்கு அதிகாரிகள் முயற்சி மேற்கொள்கின்றனா். எனவே, இந்தப் பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்களை நடாமல், மண்ணுக்கேற்ற நாட்டு மரங்களை நட்டு அடா் வனமாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், யூகலிப்டஸ் மரங்கள் ஏற்கெனவே நடப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரா் தரப்பில், தற்போது யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடவுப் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.