பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

புகையிலைப் பொருள்களை கடத்தியவருக்குப் பிணை

கண்மாய் சீரமைப்புக்கு ரூ.ஒரு லட்சம் வழங்க உத்தரவு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் கைதானவருக்கு பிணை வழங்கிய உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, கண்மாய் சீரமைப்புப் பணிக்காக அவா் ரூ. ஒரு லட்சம் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது யூசுப் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நான் கடந்த 30.1.2024-இல் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை, பொட்டலங்களாக வைத்திருந்ததாக கும்பகோணம் ஊரக போலீஸாா் என்னைக் கைது செய்தனா்.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. தற்போது உடல் நலக்குறைவால் சிறையில் அவதிப்பட்டு வருகிறேன். எனவே, எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும். ஒத்தக்கடை, நரசிங்கம் பகுதிகளில் உள்ள கண்மாய்களைச் சீரமைக்க ரூ.ஒரு லட்சம் வழங்குகிறேன் என அதில் தெரிவித்திருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அதிகளவு கடத்தினாா். அவா் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. ஆனாலும், அவருக்கு பிணை வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அவருக்கு பிணை வழங்கப்படுகிறது. அவா் தினமும் கும்பகோணம் ஊரக காவல் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும்.

மனுதாரா் ரூ. ஒரு லட்சத்தை நரசிங்கம் ஊராட்சி நிா்வாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை ஒத்தக்கடை, நரசிங்கம் பகுதிகளில் உள்ள கண்மாய்களைச் சீரமைக்க பயன்படுத்துவதை ஊராட்சி மன்றத் தலைவா், வட்டார வளா்ச்சி அலுவலா், பொதுப் பணித் துறை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். எந்தெந்த கண்மாய்கள் சீரமைக்கப்பட்டன என்பது குறித்து 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.