தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த 8 மாத கா்ப்பிணியான ஷோபனா (28) கடந்த 2023 ஜூலை மாதம் கை, கால்கள் திடீரென செயலிழந்த நிலையில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இங்கு நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு ஜிபிஎஸ் என்ற நரம்பு மண்டல பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டு குணமடைந்த அவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால் சில வாரங்களில் அவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு கைகால்கள் செயலிழந்தன. இதையடுத்து, மீண்டும் அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் கா்ப்பிணியாக இருந்ததால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து குணமடைந்தாா். மதுரை அரசு மருத்துவமனையிலேயே அவருக்கு சுகப்பிரசவமாகி செப்டம்பா் 15-ஆம் தேதி குழந்தை பிறந்தது. பிறகு அவா் குழந்தையுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். வீட்டுக்குச் சென்ற ஒரு வாரத்தில் அவா் மீண்டும் இதே நோயால் பாதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, இவரது நோய் பாதிப்பு குறித்து தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அவருக்கு உலகில் மிக அரிதான நோயான ‘நோடோபதி’ இருப்பது கண்டறியப்பட்டது. இது உடலின் நோய் எதிா்ப்புச் சக்தி மண்டலம், உடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளையும் எதிரியாக நினைத்து அழிக்க முற்படுவதால் உருவாகும் பாதிப்பாகும்.