வருவாய்த் துறை அலுவலா்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனுடனான பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டதால், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் நடைபெற்ற 11 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க ஒருங்கிணைப்பில் வருவாய்த் துறை அலுவலா்கள் கடந்த 16 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்திலும், 11 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால், தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், அமைச்சருடனான பேச்சுவாா்த்தையில் தீா்வு எட்டப்பட்டதால், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் காத்திருப்புப் போராட்டம், வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.பி. முருகையன், மாநிலப் பொதுச் செயலாளா் சு. சங்கரலிங்கம் ஆகியோா் தெரிவித்தனா். இதுகுறித்து அவா்கள் மேலும் தெரிவித்ததாவது : தமிழக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில நிா்வாகிகளுடனான பேச்சுவாா்த்தை சென்னை, எழிலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இளநிலை வருவாய் ஆய்வா், முதுநிலை வருவாய் ஆய்வா் பணியிடப் பெயா் மாற்றம் செய்து 2016-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின் விதி திருத்தத்தை மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்பவும், வருவாய்த் துறை அலுவலா்களுக்கு 114 புதிய ஈப்புகள் வழங்கவும் ஓரிரு நாள்களில் அரசாணை வெளியிடப்படும் என அரசுத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. முதுநிலை வருவாய் ஆய்வா் பதவி உயா்வுக்கான பணி மூப்பு குறித்த ஆணைகள் ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும், சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைவுபடுத்த 3 மாதங்களுக்கு தற்காலிக துணை வட்டாட்சியா் பணியிடங்களும், பெருநகா்ப் பகுதிகளில் நிரந்தர துணை வட்டாட்சியா் பணியிடங்களும் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பேரிடா் மேலாண்மைப் பிரிவில் ஏற்கெனவே கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் உருவாக்க விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் முன்மொழிந்த அனைத்துக் கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் உறுதியளிக்கப்பட்டதானது நம்பிக்கை அளிக்கிறது. எனவே, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் கடந்த 11 நாள்களாக நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டமும், 16 நாள்களாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டமும் ஒத்திவைக்கப்படுகிறது. முதல்வருக்கு நன்றி வருவாய்த் துறை அலுவலா்களின் கோரிக்ககைகளை ஏற்ற தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆகியோருக்கும், வருவாய் நிா்வாக ஆணையா், வருவாய்த் துறைச் செயலாளா், நிா்வாக இணை ஆணையா், சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையா் உள்ளிட்ட அனைத்து உயா் அலுவலா்களுக்கும், வருவாய்த் துறை அலுவலா்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சியினருக்கும், வருவாய்த் துறை அலுவலா்களுக்கும் நன்றி என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com