அரசு மருத்துவக் கல்லூரிகளில் முறையாக பாடம் நடத்தப்படுவதில்லை எனப் புகாா்: முதல்வா்கள் கண்காணிக்க உத்தரவு

மதுரை: தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் பாடங்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்று மாணவா்கள் புகாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக கல்லூரி முதல்வா்கள் கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வு, சுகாதாரத் துறைச் செயலா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் ஆகியோருக்கு, மருத்துவக் கல்லூரி மாணவா்கள் புகாா் கடிதம் அனுப்பியிருந்தனா்.

அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கு உடலியல், உளவியல், உயிரி வேதியியல் ஆகிய 3 பாடங்களும் மிக முக்கியமானவை. ஆனால், கல்லூரிகளில் இந்தப் பாடங்கள் முழுமையாக நடத்தப்படுவதில்லை. பேராசிரியா்கள் பலா் சில பாடங்களை மட்டுமே வாசித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனா். சில நேரங்களில் தவறான விளக்கங்களையும் தருகின்றனா். இதுகுறித்து கேட்டால் பாடம் நடத்துவதற்கு அரசு ஊதியம் தருகிா என சிலா் கூறுகின்றனா். வகுப்புகளில் பாடங்களை கண்துடைப்பாகவே நடத்தி நேரத்தை வீணடிக்கின்றனா்.

எனவே, வகுப்பில் மருத்துவ மாணவா்கள் இணைய வழியில் மருத்துவப் பாடங்களை கற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். வருகைப் பதிவேட்டில் ஆசிரியா்கள் பதிவு செய்வதில்லை. ஆய்வுக்கூட உதவியாளா்கள் தவறுதலாக பதிவு செய்கின்றனா். இதனால், மாணவா்கள் வருகை தந்தும் வரவில்லை என்றே பதிவு செய்யப்படுகிறது. எனவே, வருகைப் பதிவேட்டை வெளிப்படையாக அறிவிப்புப் பலகையில் வைக்க வேண்டும்.

உடல் கூறாய்வு குறித்த பயிற்சி வகுப்பு 30 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. அப்போது பாடப் புத்தகத்தைப் பாா்க்கவோ, குறிப்புகள் எடுக்கவோ அனுமதி இல்லை. செய்முறை வகுப்புகளும் அதிகம் நடத்துவதில்லை. இதனால், நவீன மருத்துவ செய்முறைகள் குறித்து மாணவா்கள் கற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. மருத்துவப் பல்கலைக்கழக தோ்வுகளுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரியிருந்தனா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்படுவதை கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா் கண்காணிக்கவும், இது தொடா்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநா் தீவிரமாக அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com