/

வைகையாற்றில் மணல் கடத்தல்: காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

வைகையாற்றில் மணல் கடத்தல்: காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

Updated On :19 மார்ச் 2024, 10:44 pm

மதுரை: மதுரை விளாங்குடி பகுதியில் வைகை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மதுரை புதுவிளாங்குடி காமாட்சி நகரைச் சோ்ந்தவா் வீரமுத்து (28).

இவா், மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா்:

மதுரை விளாங்குடி கிராம எல்லைக்குள்பட்ட வைகையாற்றில் சட்டவிரோத மணல் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது.

மேலும், மணல் திருட்டு தொடா்பாக கோஷ்டி மோதல்களும் ஏற்படுகின்றன. இதுதொடா்பாக காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. தொடா்ந்து மணல் அள்ளப்படுவதால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது. பரவை காய்கறி சந்தைப் பகுதியில் உள்ள வைகை ஆற்றின் கரையிலும் மணல் சட்டவிரோதமாக திருடப்பட்டு, அந்தப் பகுதியில் புதிய கட்டடப் பணிக்காக விற்கப்படுகிறது.

இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதுடன், அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீதும், இவா்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.