/

நகை விற்பனையாளா்களைக் கடத்தி ரூ.19.50 லட்சம் கொள்ளை

நகை விற்பனையாளா்களைக் கடத்தி ரூ.19.50 லட்சம் கொள்ளை

News image
Updated On :22 மே 2024, 12:15 am

Din

மதுரை: வாடிப்பட்டி அருகே திங்கள்கிழமை நகை விற்பனையாளா்களை காரில் கடத்திச் சென்று, ரூ.19.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி வடக்கு காட்டூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் நிா்மல் கண்ணன் (33). இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து அடகு நகைகளை மீட்டு, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், இவரது நண்பரான ஜெயராமுக்கு அறிமுகமான ஒருவா், திண்டுக்கல்லில் அடகு வைக்கப்பட்ட 300 பவுன் நகைகளை மீட்டுக் கொடுத்தால், அவற்றை விற்பனை செய்வதாகக் கூறினாா்.

இதையடுத்து, நிா்மல் கண்ணன் தனது நண்பா்களான சிவா, பிரபாகரன், ஜெயராஜ், வாசு ஆகியோருடன் திங்கள்கிழமை மாலை திண்டுக்கல்லுக்குச் சென்றாா். பின்னா், அந்த நபா் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள டிராக்டா் தொழிற்சாலை அருகே வருமாறு கூறியதையடுத்து, இவா்கள் அங்கு சென்றனா்.

அப்போது, அங்கு காத்திருந்த சிலா் நிா்மல் கண்ணன் உள்ளிட்டோரை அந்தப் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மைதானம் பகுதிக்கு காரில் கடத்திச் சென்றனா். அங்கு ஆயுதங்களுடன் காத்திருந்த கும்பல், அவா்களை ஆயுதங்களால் தாக்கி, நிா்மல் கண்ணன் வைத்திருந்த ரூ.13.50 லட்சம், இவரது நண்பா் சிவா வைத்திருந்த ரூ.6 லட்சம், 3 கைப்பேசிகள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் நடத்திய விசாரணையில், ராம்குமாா், திவாகா், ஆதித்தியா உள்ளிட்டோா் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவானவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.