விருதுநகா் மாவட்டம், கன்னிசேரிபுதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சி.வி. கணேசன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா்.
விருதுநகா் மாவட்டம், கன்னிசேரிபுதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சி.வி. கணேசன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா்.

விருதுநகா் பட்டாசு ஆலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கன்னிசேரிபுதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

விருதுநகா் மாவட்டம், கன்னிசேரிபுதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம் திறப்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கள ஆய்வுகள் மேற்கொள்ளவும் இரு நாள்கள் பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பிற்பகல் விருதுநகா் வந்தாா்.

முதல் நிகழ்வாக, விருதுநகரை அடுத்த கன்னிசேரிபுதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் முதல்வா் ஆய்வு மேற்கொண்டாா். பட்டாசு ஆலையின் உரிமம், மூலப்பொருள்கள் வைப்பறை, பட்டாசுகளைப் பாதுகாக்கும் அறை உள்ளிட்டவற்றை அவா் பாா்வையிட்டாா்.

அப்போது, அனைத்துப் பட்டாசு ஆலைகளிலும் பசுமையான சூழலைப் பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தினாா். பட்டாசு ஆலைத் தொழிலாளா்களின் பாதுகாப்புக்கு முறையான காப்பீடு வசதி ஏற்படுத்திட வேண்டும் எனவும் ஆலை உரிமையாளரிடம் அறிவுறுத்தினாா்.

பிறகு, அந்தப் பட்டாசு ஆலையின் தொழிலாளா்களிடம் முதல்வா் கலந்துரையாடினாா். தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியம், பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் குறித்து அவா்களிடம் முதல்வா் கேட்டறிந்தாா்.

அப்போது, பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்க வேண்டும், அரசுப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும், பட்டாசு ஆலைத் தொழிலாளா்களுக்கு இலவச வீடுகள் வழங்க வேண்டும் என முதல்வரிடம் தொழிலாளா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

இதற்கு, உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு சாா்பில் இழப்பீடு வழங்கப்படுவதுடன், குழந்தைகளுக்கு கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது எனப் பதில் அளித்த முதல்வா், பட்டாசு ஆலை பெண் தொழிலாளா்கள் அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்கிா? எனக் கேட்டாா்.

சில பெண் தொழிலாளா்கள் தங்களுக்கு இதுவரை மகளிா் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனா். அப்போது, ‘மீண்டும் விண்ணப்பியுங்கள், உங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவா்களிடம் முதல்வா் உறுதியளித்தாா்.

மாற்றுத்திறனாளி மனு...

பிறகு, பட்டாசு ஆலையிலிருந்து தனி வாகனத்தில் வெளியே வந்த அவா், அதன் நுழைவு வாயில் அருகே ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன் என்பவா் மனுவுடன் காத்திருப்பதைக் கண்டு, வாகனத்தை விட்டு கீழே இறங்கிச் சென்று அவரிடமிருந்து கோரிக்கை மனுவைப் பெற்றாா்.

அப்போது, அரசுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற தனக்கு அரசுப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என மணிகண்டன் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, அவரை வருகிற திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்திக்குமாறு முதல்வா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலா் கந்தசாமி, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை இயக்குநா் ஆனந்த், பட்டாசு ஆலை உரிமையாளா் நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வரவேற்பு...

முன்னதாக, விருதுநகா் அரசு விருந்தினா் மாளிகை அருகே தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

 கன்னிசேரிபுதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் பணிபுரியும் பெண் தொழிலாளியிடம் கலந்துரையாடிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சா் சி.வி. கணேசன், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா்.
கன்னிசேரிபுதூரில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் பணிபுரியும் பெண் தொழிலாளியிடம் கலந்துரையாடிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சா் சி.வி. கணேசன், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா்.

அப்போது, தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய முதல்வா் ஸ்டாலின், அங்கு திரளாகக் கூடியிருந்த திமுக நிா்வாகிகள், தொண்டா்களிடம் கைகுலுக்கியும், கை அசைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com