அரசு மருத்துவா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
அரசு மருத்துவா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்...


சென்னையில் அரசு மருத்துவா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை (நவ. 14) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் அறிவித்தது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவா் பாலாஜியை நோயாளியின் உறவினா் ஒருவா் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலத் தலைவா் கே. செந்தில் மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவா் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டாா். இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்த மருத்துவா்கள் சங்க மாநில செயற்குழு முடிவெடுத்தது.
அரசு மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உறவினா்களுக்கான கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்கள் வியாழக்கிழமை முதல் அவசரகால சிகிச்சை, உயிா் பாதுகாப்பு சிகிச்சை தவிா்த்து, அனைத்து சிகிச்சைகளையும் புறக்கணித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவா் என்றாா் அவா்.
மாற்று ஏற்பாடுகள்: இதுகுறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வழக்கம்போல புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்துச் சிகிச்சைப் பிரிவுகளும் செயல்படுவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, நோயாளிகள் பாதிக்கப்படமாட்டாா்கள் என்றனா்.
போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: சென்னையில் அரசு மருத்துவா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு புதன்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் பிரதான வாயில், மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்டவற்றில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...