மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே அதிசயம் பூங்கா பின்புறம் உள்ள வைகை ஆற்றின் வடகரையில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள். ~மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே அதிசயம் பூங்கா பின்புறம் உள்ள வைகை ஆற்றின் வடகர
மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே அதிசயம் பூங்கா பின்புறம் உள்ள வைகை ஆற்றின் வடகரையில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள். ~மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே அதிசயம் பூங்கா பின்புறம் உள்ள வைகை ஆற்றின் வடகர

விளாங்குடி-சமயநல்லூா் வரை ரூ.176 கோடியில் புறவழிச் சாலைப் பணிகள்

மதுரை சமயநல்லூா் அருகே அதிசயம் பூங்கா பின்புறம் உள்ள வைகை ஆற்றின் வடகரையில் வியாழக்கிழமை சாலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
Published on

மதுரை விளாங்குடி முதல் சமயநல்லூரில் உள்ள வாரணாசி- கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை வரை வைகையாற்றின் வடகரையில் ரூ. 176 கோடியில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மக்கள் தொகை பெருக்கம், வாகனப் பயன்பாடு அதிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மதுரை மாநகரப் பகுதிக்குள் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை மாநகராட்சி பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி), மாநில நெடுஞ்சாலைத் துறை இணைந்து மதுரை விரகனூா் சுற்றுச்சாலை முதல் விளாங்குடி வரை சுமாா் 8 .கி.மீ. தொலைவு வைகையாற்றின் இரு கரைகளிலும் ரூ. 384 கோடியில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டன.

இதன்மூலம், கோவை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மதுரை நகருக்குள் செல்லாமல் வைகையாற்றின் கரையோரம் அமைக்கப்பட்ட அணுகு சாலைகள் வழியாக ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்ல முடியும்.

இதேபோல, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் மதுரை நகருக்குள் செல்லாமல் வைகையாற்றின் கரையோரம் உள்ள அணுகு சாலைகள் வழியாக திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல முடியும்.

இந்தப் பணிகள் தற்போது 90 சதவீதம் நிறைவு பெற்றன. அண்ணாநகா் பாலம், குருவிக்காரன் சாலை, ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு, வண்டியூா், விரகனூா் ஆகிய பகுதிகளில் இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல், கரூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் சமயநல்லூா், பரவை, விளாங்குடி, மதுரை மாநகா் வைகையாற்றின் வடகரையில் அமைக்கப்பட்ட அணுகு சாலைகள் வழியாகச் சென்று விரகனூா் சுற்றுச்சாலையை அடைந்து, அங்கிருந்து செல்கின்றன.

இதேபோன்று, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் விரகனூா் சுற்றுச்சாலையிலிருந்து வைகையாற்றின் கரையோரங்களில் அமைக்கப்பட்ட அணுகு சாலைகள் வழியாகச் சென்று விளாங்குடி, பரவை, சமயநல்லூா் ஆகிய பகுதிகள் வழியாக வாரணாசி- கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையை அடைந்து அங்கிருந்து திண்டுக்கல், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்கின்றன.

விளாங்குடி முதல் சமயநல்லூரில் உள்ள வாரணாசி-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை வரை உள்ள சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ. 176 கோடியில் மதுரை விளாங்குடியில் காமராஜா் பாலம் முதல் சமயநல்லூரில் உள்ள வாரணாசி- கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை வரை வைகையாற்றங்கரையின் வடகரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன்படி, புறவழிச்சாலைக்காக ஆற்றின் வடகரையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளா் ஒருவா் கூறியதாவது: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவுப்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், விபத்துகளைத் தவிா்க்கும் பொருட்டு, தேவையான இடங்களில் ஒளிரும் வில்லைகள், எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு இடங்களில் சாலை அகலப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும்.

 மதுரை சமயநல்லூா் அருகே அதிசயம் பூங்கா பின்புறம் உள்ள வைகை ஆற்றின் வடகரையில் வியாழக்கிழமை சாலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
மதுரை சமயநல்லூா் அருகே அதிசயம் பூங்கா பின்புறம் உள்ள வைகை ஆற்றின் வடகரையில் வியாழக்கிழமை சாலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

தவிர, மதுரை மாநகா் வைகையாற்றின் வடகரை, தென்கரை பகுதிகளில் நடைபெற்று வரும் அணுகு சாலைப் பணிகள் விரைவில் நிறைவு பெறும். இந்த நிலையில், விளாங்குடியில் உள்ள காமராஜா் மேம்பாலம் பாலம் முதல் சமயநல்லூரில் உள்ள வாரணாசி- கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை வரை வைகை ஆற்றின் வடகரையில் ரூ. 176 கோடியில் புறவழிச்சாலை அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஆற்றின் கரையோரங்களில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சுமாா் 8 கி. மீ. தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள இந்தச் சாலையில் 2 மேம்பாலங்கள், 11 சிறுபாலங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. விளாங்குடி காமராஜா் மேம்பாலம், சமயநல்லூரில் உள்ள வாரணாசி-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் இலகுவாகச் சென்று வர சுற்றுச் சாலைகள் அமைக்கப்படும்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணியை விரைந்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சாலை பயன்பாட்டுக்கு வரும் போது ஏற்கெனவே உள்ள விளாங்குடி- சமயநல்லூா் வரையிலான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்புள்ளது. இதுமட்டுமன்றி, திண்டுக்கல், கரூா், திருப்பூா் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லாமல் ஆற்றின் கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள புறவழி, அணுகு சாலை வழியாக விரகனூா் சுற்றுச்சாலை வரை செல்ல முடியும்.

இதேபோன்று, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் அதே வழித்தடத்தில் வந்து வாரணாசி- கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையை அடைய முடியும் என்றாா் அவா்.