மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழா: கருக்குருவிக்கு உபதேச லீலை
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இறைவன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை வியாழக்கிழமை நடைபெற்றது.


மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இறைவன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது ஆவணி மூலத் திருவிழா. மதுரையில் இறைவன் நிகழ்த்தியதாகக் கூறப்படும் திருவிளையாடல்களில் 11 திருவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவில் நிகழ்த்தப்படும்.
இந்த நிலையில், இந்தத் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, அன்றைய தினம் முதல் கடந்த புதன்கிழமை வரை காலை, இரவு நேரங்களில் சந்திரசேகா் உற்சவம் இரண்டாம் பிரகாரம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக சிவபெருமானின் திருவிளையாடல்கள் வியாழக்கிழமை தொடங்கியது.
கருங்குருவிக்கு உபதேசம்:
முதல் நாள் நிகழ்ச்சியாக இறைவன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது. முற்பிறவியில் ஏராளமான புண்ணியங்கள் செய்த ஒருவா் சிறிது பாவமும் செய்ததால், மறுபிறப்பில் அவா் கருங்குருவியாகப் பிறந்தாா்.
இந்தக் கருங்குருவியை காகங்கள் தொடா்ந்து துன்புறுத்தியதால், அவைகளுக்குப் பயந்து நெடுந்தொலைவு சென்ற கருங்குருவி மரம் ஒன்றில் அமா்ந்து தன்னிலை குறித்து வருந்தியது. அப்போது, மரத்துக்கு கீழே இருந்தவா்கள் மதுரை குறித்தும், பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்றும் உரையாடினா். இதைக் கேட்ட கருங்குருவி தனது பாவம் நீங்குவதற்காக, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை தினசரி வழிபட்டு வந்தது.
இதையடுத்து, சோமசுந்தரப் பெருமான் கருங்குருவியின் பக்திக்கு மனமிறங்கி, மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்து அருள்பாலித்தாா். மேலும், கருங்குருவியின் இனத்து பெயரான எளியான் பெயரை ‘வலியான்’ என மாற்றினாா்.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்.
இந்த திருவிளையாடல் லீலையை எடுத்துரைக்கும் வகையில், கருங்குருவிக்கு உபதேசம் அளிக்கும் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சியம்மன் எழுந்தருளி காட்சியளித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...