துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

குஜராத் மாநிலத்தில் தமிழா்கள் கொத்தடிமைகளாக இல்லை

குஜராத் மாநிலத்தில் தமிழகத் தொழிலாளா்கள் யாரும் கொத்தடிமைகளாகப் பணிபுரியவில்லை என அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:12 pm

Din

குஜராத் மாநிலத்தில் தமிழகத் தொழிலாளா்கள் யாரும் கொத்தடிமைகளாகப் பணிபுரியவில்லை என அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி திட்டங்குளத்தைச் சோ்ந்த வசந்தா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது மகன் அய்யனாா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வேலைக்கு செல்வதாகக் கூறிச் சென்றாா். அவரிடமிருந்து எங்களுக்கு எந்தத் தொடா்பும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில், எங்களை கைப்பேசியில் தொடா்பு கொண்ட அய்யனாா் அழுதுகொண்டு பேசினாா். அப்போது, குஜராத் மாநிலம், காந்திநகரில் இனிப்பகங்கள் விற்பனைக் கடையில் கொத்தடிமையாக வேலை செய்து வருகிறேன். இங்கு மிகவும் கஷ்டமாக உள்ளதுடன், கொடுமைப்படுத்துகின்றனா். என்னை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டால், கடை உரிமையாளா்கள் மறுப்பதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, எனது மகனை மீட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதுடன், உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, அய்யனாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டாா். அப்போது அவா், என்னைப் போன்று தமிழகத்தைச் சோ்ந்த பலா் குஜராத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்களாக உள்ளனா். அவா்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து நீதிமன்றம், குஜராத்தில் உள்ள தமிழகத்தைச் சோ்ந்த கொத்தடிமைத் தொழிலாளா்களை மீட்க தூத்துக்குடி காவல் துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், சத்யநாராயண பிரசாத் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அளித்த அறிக்கையை தாக்கல் செய்தனா். நீதிமன்ற உத்தரவின்படி, சிறப்புக் குழுவினா் குஜராத் சென்றனா். அங்குள்ள அரசு அதிகாரிகள் உதவியுடன் மனுதாரரின் மகன் குறிப்பிட்ட இடங்களில் பணிபுரிந்த முருகன், கணேசமூா்த்தி, பாண்டி, சரவணகுமாா் ஆகியோரிடம் விசாரணை செய்தனா். அப்போது அவா்கள், விருப்பத்தின் பேரில் பணிபுரிந்து வருவதாகவும், யாரும் கட்டாயப்படுத்த வில்லை, எந்த பிரச்னையும் இல்லை எனத் தெரிவித்தனா் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

குஜராத்தில் தமிழகத் தொழிலாளா்கள் விருப்பத்தின் பேரில் பணிபுரிந்து வருகின்றனா். மனுதாரரின் மகன் நீதிமன்றத்தில் முரண்பட்ட தகவலைத் தெரிவித்துள்ளாா்.

எனவே, இழப்பீடு கோரும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.