உயா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை: உயா் கல்வி உதவித் தொகைக்கு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
அரசு, உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கு பிரதமரின் பள்ளி உயா் கல்வி உதவித் தொகைத் திட்டம் மூலம் ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அரசு, உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு பயிலுபவா்களுக்கு நிபந்தனையின்றி உதவித் தொகை வழங்கப்படும். தொழில் படிப்பில் இளநிலை, முதுநிலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்புகளை பயிலும் மாணவா்களுக்கு, அவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமலிருந்தால் மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும்.
தகுதியான மாணவா்கள், தங்கள் கல்வி நிறுவனத்தில் உள்ள உதவித் தொகைக்கான ஒருங்கிணைப்பு அலுவலரை நேரில் அணுகி யு.எம்.ஐ.எஸ். எண்ணுடன் இணையதளம் வாயிலாக டிச. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகலாம் என்றாா் அவா்.
