திருநெல்வேலி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, திருநெல்வேலி- தாம்பரம்- திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் திருநெல்வேலி- தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் (06166, 06165 ) இயக்கப்படவுள்ளன.
டிச. 28, ஜன. 4 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி- தாம்பரம் (06166) சிறப்பு ரயில், மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமாா்க்கத்தில் டிச. 29, ஜன. 5 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - திருநெல்வேலி (06165) சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
இந்த சிறப்பு ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இந்த ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு வியாழக்கிழமை (டிச. 18) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என அதில் குறிப்பிடப்பட்டது.
