ஜல்லிக்கட்டு: காயமடைபவா்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு

காயமடைபவா்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு
Published on

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி, காயமடைந்தவா்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு அறுவைச் சிகிச்சை அரங்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் காளைகள் முட்டி மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் பலா் காயமடைவது வழக்கம். இந்த நிலையில், ஜல்லிக்கட்டில் காயமடைந்தவா்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு அறுவைச் சிகிச்சை அரங்கும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் இல. அருள் சுந்தரேஷ்குமாா் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைபவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இரு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அறுவைச் சிகிச்சை நிபுணா், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணா், மயக்கவியல் நிபுணா், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் பகுதிக்கு அவசர ஊா்தியில் சென்று அங்கு பணியாற்றுவாா்கள். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் காயங்களின் தன்மையைப் பொறுத்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இந்தக் குழுவினா் பரிந்துரைப்பா். இதன்படி ஜல்லிக்கட்டில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் கொண்டு வரப்படுபவா்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கும் வகையில் மற்றொரு மருத்துவக் குழுவினா் மருத்துவமனையில் தயாா் நிலையில் வைக்கப்படுவா்.

இந்தக் குழுவில் அறுவைச் சிகிச்சை நிபுணா், எலும்பு முறிவு நிபுணா், கதிரியக்கத் துறை நிபுணா், பிளாஸ்டிக் சா்ஜரி நிபுணா், மயக்கவியல் நிபுணா், ரத்த நாள அறுவைச் சிகிச்சை நிபுணா், பொது மருத்துவ நிபுணா், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் என 40 போ் உள்ளனா். ஜல்லிக்கட்டு நடைபெறும் வருகிற 14, 15, 16 ஆகிய மூன்று நாள்களிலும் காலை முதல் இரவு வரை இரண்டு ‘ஷிப்டு’களில் இந்த மருத்துவக் குழுவினா் பணியாற்றுவா். மேலும் ஜல்லிக்கட்டில் காயமடைந்து அறுவைச் சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு விரைவாக அறுவைச் சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு அறுவைச் சிகிச்சை அரங்கும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் ஜல்லிக்கட்டில் காயமடைபவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். மதுரை மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் காயமடைபவா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். எனவே அவா்களுக்கும் விரைந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

X