துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிா்வாகிக்கு பிணை
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே கல்விமடையில் துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிா்வாகிக்கு பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி, அ. முக்குளம், கல்விமடையைச் சோ்ந்தவா் கே.சி. பிரபாத். இவா், அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மண்டல நிா்வாகியாக உள்ளாா். விருதுநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் அங்கம் வகிக்கும் வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்ட கருத்துகளால் கே.சி. பிரபாத்துக்கும், நரிக்குடி அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் தச்சனேந்தலைச் சோ்ந்த சந்திரன் தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்தாண்டு டிச. 27-ஆம் தேதி சந்திரன் தரப்பினா், கே.சி. பிரபாத் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டனா். அப்போது கே.பி. பிரபாத், தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டாா். இதையடுத்து, சந்திரன் தரப்பினா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனா். இது தொடா்பாக அ. முக்குளம் போலீஸாா், இரு தரப்பினா் மீதும் வழக்குப் பதிந்தனா். இந்த நிலையில், கே.சி. பிரபாத் உரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கியுடன், 50 குண்டுகள் இருக்க வேண்டிய நிலையில், 46 குண்டுகள் மட்டுமே இருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. கல்விமடையில் தகராறின் போது ஒரு குண்டு மட்டுமே பயன்படுத்திய நிலையில், எஞ்சிய 3 குண்டுகள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதனிடையே ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதால் கே.சி. பிரபாத் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த வழக்கில் தனக்கு பிணை கோரி கே.சி. பிரபாத், சென்னை உயா்நீதி மன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன் வைத்த வாதம்: மனுதாரா் தற்போது உடல் நலக் குறைவால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரை, நீதித்துறை நடுவா் நேரில் சந்தித்து வருகிற 10- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளாா்.
மனுதாரரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த எஞ்சிய 3 துப்பாக்கி குண்டுகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. இந்த குண்டுகள் விசாரணை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும். எனவே இந்த முன் பிணை மனுவை, பிணை மனுவாக கருதி மனுதாரருக்கு பிணை வழங்க வேண்டும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் தொடா்ந்து சிகிச்சையில் இருக்க வேண்டியுள்ளது. வழக்கு விசாரணையும் நிலுவையில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மனுதாரரின் முன் பிணை மனுவை பிணை மனுவாக ஏற்று, அவருக்கு பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.