நில ஆக்கிரமிப்பில் அமைச்சா் தலையீடு: பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு

நில ஆக்கிரமிப்பில் அமைச்சா் தலையீடு
Published on

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அமைச்சா் அர. சக்கரபாணி தலையீடு இருப்பதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், மனுதாரரின் குடும்பத்தினருக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நாகனம்பட்டியைச் சோ்ந்த நல்லசாமி (68) சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ஒட்டன்சத்திரத்தில் எனக்குச் சொந்தமான 9.78 ஏக்கா் நிலத்தில் குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறேன். எனது தாத்தா கடந்த 1952-ஆம் ஆண்டில் வாங்கிய இந்த நிலத்துக்கு பட்டா உள்ளது. இதில் 89 சென்ட் நிலத்தை அய்யாவு, கபிலன் உள்பட 7 போ் இணைந்து மோசடியாக சிலருக்கு விற்பனை செய்ய முயன்றனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் உரிமையியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தாா்.

இந்த நிலையில், நில மோசடி செய்தவா்களில் ஒருவரான கபிலனும், அவரது ஆதரவாளா்களும் எனது நிலத்தில் புகுந்து சேதப்படுத்தினா். பிறகு, நிலத்தை கபிலன் அபகரித்துக் கொண்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனால், போலீஸாா் கபிலனுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனா்.

இதுகுறித்து விசாரித்த போது கபிலன், அமைச்சா் அர. சக்கரபாணிக்கு நெருக்கமானவா் என்பது தெரிந்தது. இதுதொடா்பாக கடந்த ஆண்டு, நவ. 22-ஆம் தேதி முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகாா் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அமைச்சா் அர. சக்கரபாணி தலையீடு இருப்பதுடன், அரசு அலுவலா்களும் கபிலனுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனா்.

எனவே, எனக்குச் சொந்தமான நிலத்தை மீட்பதுடன், எனக்கும், குடும்பத்தினருக்கும் காவல் துறை பாதுகாப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்க திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரா் அனுபவத்தில் உள்ள சொத்துகளுக்கு கபிலன் உள்ளிட்டோா் இடையூறு செய்யக் கூடாது.

மனுதாரின் புகாா் குறித்து வருவாய்த் துறை முதன்மைச் செயலா், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.