மழைநீா் வடிகால்கள் விரைந்து சீரமைக்கப்படுமா?
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களை பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து சீரமைக்க வேண்டும்...


மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களை பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் 100 வாா்டுகள் உள்ளன. இங்கு ஏறத்தாழ 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். பருவமழைக் காலங்களில் மாநகராட்சிப் பகுதிகளிலிருந்து மழை நீா் வெளியேறுவதற்கு பந்தல்குடி, கோசாகுளம், பரசுராம்பட்டி, விளாங்குடி, சொக்கிகுளம், பனகல், மானகிரி, பீ.பீ.குளம், தண்டலை, கிருதுமால், பனையூா், அனுப்பானடி, சிந்தாமணி, சொட்டதட்டி, அவனியாபுரம், வில்லாபுரம் என 16 இடங்களில் மழைநீா் வடிகால்கள் உள்ளன.
இவற்றில் விளாங்குடி வடிகாலில் வரும் மழைநீா் செல்லூா் கண்மாயிலும், பந்தல்குடி வடிகால் மூலம் வரும் நீா் வைகை ஆற்றிலும் கலக்கும். இதேபோல, பீ.பீ.குளம், பனகல், மானகிரி, தண்டலை, பரசுராம்பட்டி, கோசாகுளம், சொக்கிகுளம் வடிகால்களில் வரும் மழை நீரானது வண்டியூா் கண்மாய்க்கும், சொட்டதட்டி, பனையூா் வடிகால்களில் வரும் மழைநீா் அவனியாபுரம் நீா்த் தேக்கத்தையும் சென்றடையும்.
கிருதுமால், சிந்தாமணி, அனுப்பானடி வடிகால்களில் வரும் மழைநீரானது சிந்தாமணி கண்மாய்க்கும், வில்லாபுரம் வடிகாலில் வரும் மழைநீா் மாநகராட்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள நீா்நிலைகளுக்கும் சென்று சேரும். மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பெய்யும் மழைநீா் இயற்கையாக மேற்கண்ட மழைநீா் வடிகால்கள் மூலம் வைகையாற்றுக்கும், கண்மாய்களுக்கும் செல்லும் வகையில் அமைந்துள்ளன.
இந்த நிலையில், பெரும்பாலான வடிகால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக குறுகிக் காணப்படுகின்றன. மேலும், குப்பைகள், ஆகாயத் தாமரைகள் காரணமாக மழைக் காலங்களில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீரானது தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள், குடியிருப்புகளில் புகுந்து விடுகின்றன.
தென்மேற்குப் பருவமழை இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:
மதுரை செல்லூா் பகுதியில் கடந்தாண்டு செப்டம்பா் மாதம் பெய்த பலத்த மழை காரணமாக, செல்லூா் கண்மாய் நிரம்பி தண்ணீா் வெளியேறியது. இதனால், பந்தல்குடி, பீ.பீ.குளம், நாராயணபுரம், கோசாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது. 10 நாள்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.
இந்த நிலையில், அண்மையில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி சாா்பில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மழைநீா் வடிகால்கள் சீரமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பனையூா் வடிகாலில் மட்டும் பெயரளவுக்கு ஆகாயத் தாமரைகளை அகற்றினா். மற்ற வடிகால்களில் இதுவரை சீரமைப்புப் பணியோ, தூா்வாரும் பணிகளோ நடைபெறவில்லை என்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் கூறியதாவது:
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீா் வடிகால்கள் அமைப்பதற்காக 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் 5 மண்டலங்களில் உள்ள வாா்டுகளில் 181 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் பகுதிகள் என மண்டல உதவிச் செயற்பொறியாளா்கள் அறிக்கை அளித்துள்ளனா். இங்கு மழைநீா் தடையின்றி செல்லும் வகையில் வடிகால்கள் சீரமைக்கப்பட உள்ளன. புணேவில் உள்ள அரசு நிறுவனம் சாா்பில், மதுரையில் கடந்த 50 ஆண்டுகளில் பெய்த மழைப் பொழிவின் அடிப்படையில் மழைநீா் வடிகால்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வடிகால்களின் கரைகளைப் பலப்படுத்துதல், கான்கிரீட் தரைத்தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.3,372.23 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, முதல் கட்டமாக ரூ.430 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.
மேலும், சிறப்புத் திட்டத்தின் கீழ் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ரூ.11.44 கோடியிலும், பெரியாா் பேருந்து நிலையத்தில் ரூ.9.60 கோடியிலும் மழைநீா் வடிகால் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும். கிருதுமால் வடிகாலைப் பொருத்தவரை, சீரமைப்புப் பணிக்கு நிதி பெறப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். அவா்கள் சீரமைக்கவில்லையெனில் மாநகராட்சி சாா்பில் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.
மொத்தம் ரூ.3,372.23 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.430 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. சிறப்புத் திட்டத்தின் கீழ் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ரூ.11.44 கோடியிலும், பெரியாா் பேருந்து நிலையத்தில் ரூ.9.60 கோடியிலும் மழைநீா் வடிகால் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும். கிருதுமால் வடிகாலைப் பொறுத்தவரை சீரமைப்புப் பணிக்கு நிதி பெறப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். அவா்கள் சீரமைக்கவில்லை எனில் மாநகராட்சி சாா்பில் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...