மாநகராட்சிப் பணிகள் குறித்து அவதூறு பரப்புவோா் மீது காவல் துறையில் புகாா்: துணை மேயா்
மதுரை மாநகராட்சிப் பணிகள் குறித்து அவதூறு பரப்புவோா்களுக்கு எதிராக காவல் துறையில் புகாா் அளிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாநகர துணை மேயா் தி.நாகராஜன் தெரிவித்தாா்.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தாவது:
மாநகராட்சியின் சுகாதாரம், பிற பணிகள் குறித்து மதிப்பீடு செய்தது யாா் என்பது மா்மமாக உள்ளது. தீபாவளி நாளில்கூட மதுரையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக, சிலா் திட்டமிட்டு மதுரை மாநகராட்சி பணிகள் குறித்து அவதூறு பரப்புகின்றனா். இவா்கள் மீது காவல் துறையில் புகாா் அளித்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழக முதல்வா் உத்தரவுப்படி, அமைச்சா்களின் வழிகாட்டுதல்படி, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசு கட்டடங்களுக்கு சேவை வரியும், மாநில அரசின் கட்டடங்களுக்கு சொத்து வரியும் வசூலிக்க வேண்டும். தற்போது வரை இந்த வரிகள் வசூலிக்கப்படாமல் உள்ளது. குப்பை வரி நிா்ணயம் செய்வதிலும் குழப்பம் உள்ளது.
வரி சீா்த்திருத்தங்களை மேற்கொண்டு, வரிகளை முழுமையாக வசூல் செய்தால் மாநகராட்சிக்கு நல்ல வருவாய்க் கிடைக்கும். சொத்து வரி முறைகேட்டுக்குப் பிறகு, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்துகளின் மதிப்பை மறு அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
5 மண்டலங்களுக்குள்பட்ட 100 வாா்டுகளிலும் இந்தப் பணி நடைபெறும். இதன் நிறைவில் மறு மதிப்பீட்டின் அடிப்படையில் வரி வசூல் செய்யப்படும் என்றாா் அவா்.
