மக்கள் கண்காணிப்பு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை சொக்கிகுளம் பெசன்ட் சாலை பகுதியில் உள்ள மக்கள் கண்காணிப்பு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
மனித உரிமைகள் அமைப்பின் அலுவலகமான இந்த மக்கள் கண்காணிப்பு அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து, மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் அலுவலகங்கள், அதன் உள்பகுதிகள், சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் டிடெக்டா் கருவிகள் மூலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடா்பாக அந்த அமைப்பின் இயக்குநரும், மூத்த வழக்குரைஞருமான ஹென்றிதீபென்னுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரும் அலுவலகத்துக்கு வந்து பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள், தல்லாகுளம் போலீஸாா் நடத்திய சோதனையில் அலுவலகத்தில் எந்த வெடிப் பொருள்களும் கண்டறியப்படவில்லை என்பதும், இது போலியான மிரட்டல் என்பதும் தெரியவந்தது.
ஸ்டொ்லைட், மடப்புரம் அஜித்குமாா் கொலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் முன்னிலையாகி வரும் ஹென்றிதிபெனின் மக்கள் கண்காணிப்பு அலுவலகத்துக்கு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

