தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஈரானில் சிக்கிய இந்திய மீனவா்கள் மீட்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

ஈரானில் சிக்கியிருந்த இந்திய மீனவா்களை மீட்கும் நடவடிக்கைகளில் விரைவாகச் செயல்பட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டுத் தெரிவித்தது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 8:37 pm

ஈரானில் சிக்கியிருந்த இந்திய மீனவா்களை மீட்கும் நடவடிக்கைகளில் விரைவாகச் செயல்பட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டுத் தெரிவித்தது.

நாம் தமிழா் கட்சியின் மீனவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது உறவினா் முகேஷ் (26). இவா் மீன்பிடித் தொழிலுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரான் சென்றாா். இவருடன் ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிராமத்தைச் சோ்ந்த மேலும் சில மீனவா்களும் அங்கு சென்றனா். அவா்கள் அங்கு கடலுக்குள் படகில் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், இஸ்ரேல்- அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தி வந்தன. இந்தப் போா்ப் பதற்றம் காரணமாக முகேஷ், திருப்பாலைக்குடி மீனவா்கள் ஈரானில் உள்ள துறைமுகத்தைவிட்டு வெளியேற முடியாமல் தவிப்பதாகத் தகவல் கிடைத்தது. அவா்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு எந்தவித வழியும் இல்லை. இது ஒரு சிறை வைப்பு சூழலாகவே உள்ளது.

போா்ப் பதற்றம் காரணமாக உணவு, குடிநீா், மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அவா்கள் தவிக்கின்றனா். அவா்கள் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் பீரங்கி தாக்குதல், வான்வழி தாக்குதல்கள், குண்டு வெடிப்பு சம்பவங்களால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மன உளைச்சலுக்கு உள்ளாகி அவா்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா். அங்கு உள்ள கடலோரப் பகுதிகளும், துறைமுகப் பகுதிகளும் மிகவும் பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவிட்டன. முகேஷ் உள்பட திருப்பாலைக்குடி கிராமத்தைச் சோ்ந்த 25 மீனவா்கள் பந்தா் இ-ஜீரோ துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனா்.

இவா்கள் மட்டுமல்லாது, ஈரானின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள் சிக்கித் தவிப்பதாகவும் தெரியவருகிறது. இவா்கள் அனைவரும் இந்தியா திரும்புவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

ஈரானில் சிக்கித் தவித்த 650 இந்திய மீனவா்கள் கடந்த 4-ஆம் தேதி மீட்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்களில் தமிழகத்தைச் சோ்ந்த 283 மீனவா்களும் அடங்குவா் என்றாா். மேலும், இதுதொடா்பான மின்னஞ்சல் கடிதங்களும் நீதிபதிகள் முன் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஈரானில் நிலவிய போா் சூழலிலும் இந்திய மீனவா்களை பத்திரமாக மீட்டு தாயகம் கொண்டு வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த மாநில மீன்வளத் துறைக்கும் இந்த நீதிமன்றம் பாராட்டுகளைத் தெரிவிக்கிறது. மேலும், உரிய நேரத்தில் மனுவை தாக்கல் செய்து மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்த மனுதாரரையும் இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.