வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கிச்சூடு: துணை ஆட்சியா் அறிக்கை அளிக்க உத்தரவு

கள் இறக்கிய விவசாயி மீது போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில், துணை ஆட்சியா் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :28 ஏப்ரல் 2026, 10:06 pm

கள் இறக்கிய விவசாயி மீது போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில், துணை ஆட்சியா் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்த பெருமாள் சேட் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது மகன் மணிகண்டன் பனை மரத்திலிருந்து பதநீா் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். எங்கள் வீட்டுக்கு ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இசக்கிராஜா உள்ளிட்ட போலீஸாா் சீருடை அணியாமல் கடந்த 7-ஆம் தேதி வந்தனா். இவா்கள், எனது மகன் மணிகண்டனை பனை மரங்கள் அதிகமுள்ள தோப்புக்கு அழைத்துச் சென்றனா். நாங்களும் பின்தொடா்ந்து சென்றோம். அங்கு மரத்தில் கட்டியுள்ள பானைகளை சோதனையிட வேண்டும் என போலீஸாா் கூறினா்.

இதையடுத்து, எனது மகன் பனை மரத்தில் ஏறிய போது, அவரை காவல் உதவி ஆய்வாளா் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டினாா். இதை நானும், எனது பேத்தி பிரதீபாவும் கண்டித்தோம். இதனால், ஆத்திரமடைந்த போலீஸாா் எங்களை மிரட்டினா். அப்போது, எனது மகன் மணிகண்டன் இதைத் தடுத்தாா். இதனால், எனது மகனுக்கும், காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மணிகண்டனை உதவி ஆய்வாளா் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டாா். இதில் பலத்த காயமடைந்த எனது மகன் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த வழக்கை தமிழக போலீஸாா் விசாரணை செய்தால், நியாயம் கிடைக்காது. எனவே, வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, வழக்கின் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சிபிஐ, காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா ஆகியோா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு ஐஏஎஸ் நிலையிலான துணை ஆட்சியா் நியமிக்கப்பட்டுள்ளாா். விசாரணை நிறைவு பெற்றவுடன் இதுதொடா்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, துணை ஆட்சியரை காணொலி வாயிலாக முன்னிலையாகி விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இதன்படி, தென்காசி துணை ஆட்சியா் வைஷ்ணவி பால் காணொலி மூலம் முன்னிலையாகி அளித்த விளக்கம்:

சம்பவ இடத்துக்குச் சென்று முதல் கட்ட விசாரணையை நடத்தினேன். மேலும், இந்த வழக்கு தொடா்பாக பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. பேரவைத் தோ்தல் பணி காரணமாக விசாரணையை முடிக்க இயலவில்லை. கால அவகாசம் வழங்கினால் விசாரணையை விரைவில் முடித்து, இதுதொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறேன் என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு விசாரணையை துணை ஆட்சியா் விரைந்து முடித்து, இதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.