தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

பெட்ரோல் நிலையங்களில் மின்னேற்று அமைப்பு: நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சாா்ஜிங் நிலையம் தொடங்கப்படுவது குறித்து இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:48 am IST

பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மின்னேற்று அமைப்பு (சாா்ஜிங் நிலையம்) தொடங்கப்படுவது குறித்து இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கதிா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், திருமங்கலம் முதல் தென்காசி வரையிலான நான்கு வழிச் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களுக்கான மின்னேற்றும் வசதி முறையாகச் செயல்படவில்லை. இதனால், தனியாா் மின்னேற்று நிலையங்களில் மின் கல வாகனங்களுக்கு (பேட்டரி வாகனங்கள்) அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே, திருமங்கலம்-தென்காசி சாலையில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மின்னேற்று கட்டமைப்பைச் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மத்திய சிறைகளுக்கு வெளியே சிறைத் துறையால் நடத்தப்படும் ‘ஃபிரீடம் ஃபில்லிங் ஸ்டேஷன்’ பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மின் கல வாகனங்களுக்கான மின்னேற்றும் வசதிகள் இல்லை. எனவே, இந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் மின்னேற்று கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

மேலும், மின்னேற்று நிலையங்களின் பராமரிப்பைக் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். புகாா் அளிக்கும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எப்போது, எந்தெந்த நிலையங்களில் மின்னேற்று அமைப்பு தொடங்கப்படும் என்பது குறித்து இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.