மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலிருந்து முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு விலக்களிக்கக் கோரிய மனு தொடா்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் வி. மணிவாசகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் தங்களது எதிா்கால கல்வி, தொழில் வாய்ப்புகளைத் தீா்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பொதுத் தோ்வுகளுக்குத் தயாராகி வருகின்றனா்.
இந்த நிலையில், 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் ஆக. 1 முதல் 31-ஆம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட நிா்பந்திப்பது மாணவா்களின் எதிா்காலத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்திலும், வருகிற 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலிருந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு விலக்களிக்க உத்தரவிட வேண்டும்.
குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகா், தேனி, சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பணிபுரியும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநா், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களை ஈடுபடுத்துவது தொடா்பாக கொள்கை அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த மனுவில் 14 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலா்கள் எதிா்மனுதாரா்களாகச் சோ்க்கப்படுகின்றனா். இந்த வழக்கு விசாரணை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு: கூடுதல் பணியாளா்களை நியமிக்க கோரிக்கை

சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிப்பு: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு
சிறைவாசிகளின் குடும்பத்தினருக்கு வட்டியில்லா கடனுதவி கோரிக்கை: அரசு பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



