நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தக் கோரி மனு: இயற்கை வளங்கள் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தக் கோரிய மனு தொடா்பாக இயற்கை வளங்கள் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தக் கோரிய மனு தொடா்பாக இயற்கை வளங்கள் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஹோமா்லால் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கட்டுமானப் பணிகளுக்கு எம்-சாண்ட், மணல், மண் போன்றவை அத்தியாவசியத் தேவைகளாக உள்ளன. தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்று தனியாா் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் அனுமதி பெறப்பட்ட அளவைவிட கனிமங்கள் கூடுதலாக வெட்டி எடுக்கப்படுவதால், அந்தப் பகுதியில் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தும் போது, போதுமான வேலைவாய்ப்பை வழங்க முடியும். நேரடியாகக் கனிமங்களை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

கடந்த 1978-ஆம் ஆண்டில் கிரானைட், கிராஃபைட், சுண்ணாம்புக்கல் போன்ற கனிமங்களை ஆராய தமிழக அரசு ‘டாமின்’ என்ற நிறுவனத்தை உருவாக்கியது. மேலும், கரடுமுரடான கல், எம்-சாண்ட், பி-சாண்ட், இதர சுரங்கத் திட்டங்களையும் குறிப்பிட்ட துறையிடம் ஒப்படைத்து அரசு வருவாய் ஈட்டலாம்.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறைச் செயலா், புவியியல், சுரங்கத் துறை இயக்குநா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற செப். 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.