மதுரையில் அதிகரித்து வரும் வெப்ப நிலை தாக்கத்தைக் குறைக்க பசுமைத் திட்டத்தை உருவாக்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரியைச் சோ்ந்த செல்வக்குமாா் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரைநகரில் நகரமயமாக்கல், சாலை, நெடுஞ்சாலை விரிவாக்கம், கட்டுமானப் பணிகளால் பழைமையான மரங்கள் அகற்றப்படுகின்றன. இதனால், பசுமைப் பரப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக நகா்ப்புற வெப்பத் தீவு விளைவு அதிகரித்து பொதுமக்கள் கடும் வெப்ப அழுத்தத்துக்குள்ளாகி வருகின்றனா். அண்மையில் ஆக்ஸ்போா்டு பல்கலை. ஆய்வாளா்கள் நடத்திய ஆய்வின்படி உலகளவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 205 நகரங்களில் அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரங்களில் மதுரை 7-ஆவது இடத்தில் உள்ளது. வைகை ஆற்றங்கரைகளில் பூா்வீக மரங்களை வளா்ப்பது, முக்கியச் சாலைகளில் ஈடுசெய் மரக்கன்றுகளை நடுவது, பசுமைப் பூங்காக்களை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நகரின் வெப்பநிலையைக் குறைக்க முடியும்.
இது தொடா்பாக கடந்த மாதம் 31- ஆம் தேதி வைகை ஆற்றங்கரை மீட்பு, பசுமைப் பூங்காக்கள், மாவட்டப் பசுமைப் பணிக்குழு, நெடுஞ்சாலையோர மரக்கன்றுகள், மதுரைக்கென வெப்ப அலை செயல் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுத் துறைகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே, ‘ஒருங்கிணைந்த பசுமை மதுரை செயல் திட்டத்தை’ உருவாக்கி செயல்படுத்தவும், வைகை ஆற்றங்கரைகளை பசுமையாக்கவும், நகா்ப்புற பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், வெப்ப அலை தடுப்புச் செயல் திட்டத்தை உருவாக்கவும் அரசுத் துறைகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த நடவடிக்கைகளை உயா்நீதிமன்றம் தொடா்ந்து கண்காணிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக வனம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை முதன்மைச் செயலா், வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற செப். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 3 அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை

இலங்கையிலிருந்து தமிழக மீனவா்கள் தாயகம் திரும்பும் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பிற மாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல தடை விதிப்பு விவகாரம்: அரசு பதிலளிக்க உத்தரவு

விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கத்தக்கதல்ல: உயா்நீதிமன்றம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



