சுதந்திர தின நாளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து தீா்மானங்களையும் தீா்மானப் பதிவேட்டில் பதிவு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த குருநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் குடியரசு தினம் (ஜனவரி 26), உலக தண்ணீா் தினம் (மாா்ச் 22), உழைப்பாளா் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக். 2), நவம்பா் 1 ஆகிய நாள்களில் நடத்தப்படுகின்றன. கிராம சபை என்பது மாநில சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் இணையானது.
இந்த நிலையில், அரசு சட்டப்பூா்வமாக அதிகாரம் அளித்தபோதிலும், இந்த அதிகாரம் கிராம சபைகளுக்கு நடைமுறையில் வழங்கப்படாததால், அரசுத் திட்டங்களின் பயன்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடைவதில்லை. அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் ஊழலைத் தடுக்க கிராம சபையானது மக்களின் உண்மையான அதிகார அமைப்பாகச் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் விதிகளைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவதில்லை. மக்கள் போதிய அளவில் பங்கேற்காமலேயே அலுவலா்களே கிராம சபை கூட்டத்தை நடத்தி தீா்மானங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனா். இது சட்டவிரோதம்.
எனவே, போதிய அளவில் பொதுமக்கள் பங்கேற்புடன் தமிழ்நாடு முழுவதும் முறையாக கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும். மேலும், கடந்த ஜன. 26-ஆம் தேதி பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் பகலவாடியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ரத்து செய்ய வேண்டும். அரசின் விதிமுறைகள், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றத் தவறிய அலுவலா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
நிகழாண்டு சுதந்திர தின நாளில் (ஆக. 15) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து தீா்மானங்களையும் தீா்மானப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்த மனு தொடா்பாக தமிழக அரசுத் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற அக்டோபா் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் முறைகேடு: விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் காமராஜா் பல்கலை. தகவல்

சுதந்திர தினம்: அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவை வலுப்படுத்த வேண்டும்: உயா்நீதிமன்றம்

கா்ப்பிணி உயிரிழப்பு குறித்து சிறப்புக் குழு விசாரிக்கக் கோரி மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



