கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி கிராமத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் கல் குவாரியை மூட உத்தரவிடக் கோரிய மனு தொடா்பாக மாவட்ட புவியியல், சுரங்கத் துறையினா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சுங்கான்கடை பகுதியைச் சோ்ந்த சொா்ணலதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி கிராமத்தில் உரிய அனுமதியின்றி கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரியிலிருந்து வெளியேறும் அதிகளவிலான தூசுகள், கழிவு நீரால் இந்தப் பகுதியிலுள்ள விவசாயப் பணிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம், காற்று மாசு தடுப்புச் சட்ட விதிகளின்படி, குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கு அருகில் குறைந்தது 300 முதல் 500 மீ. இடைவெளியின்றி இத்தகைய அபாயகரமான தொழில்களை நடத்த அனுமதி கிடையாது.
எனவே, வில்லுக்குறி கிராமத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் கல் குவாரியை ஆய்வு செய்து மூட உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் மலை அளவீடு: தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கல் குவாரி உரிமம் விவகாரம்: வெம்பக்கோட்டை வட்டாட்சியா் அறிக்கை அளிக்க உத்தரவு

கரூா் கோயில் நிலங்கள் பத்திரப் பதிவு விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு




