75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

மதுரையில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்: திரளானோா் பங்கேற்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுந்தரேசுவரா் பட்டாபிஷேகம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சுந்தரேசுவரா் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன். (2) பட்டாபிஷேகத்துக்கு பிறகு ராயா் கிரீடம் சூடி, கையில் செங்கோல் தரித்து பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுந்தரேசுவரா். (3) சுந்தரேசுவரரிடமிருந்த செங்கோலைப் பெற்று பிரகாரத்தை வலம் வந்த கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன் உள்ளிட்டோா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:46 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுந்தரேசுவரா் பட்டாபிஷேகம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுந்தரேசுவரா் பட்டாபிஷேகம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு சுவாமி, அம்மனுக்கு ஐதீக முறைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், மேளதாள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க சுந்தரேசுவரருக்கு ராயா் கிரீடம் சூட்டப்பட்டு, ரத்தினங்கள் பதித்த செங்கோல் சாத்தி, ஐதீக முறைப்படி பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன் சுந்தரேசுவரரிடமிருந்த செங்கோலைப் பெற்று சுவாமி சந்நிதியின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து சமா்ப்பித்தாா். இதையடுத்து, சுந்தரேசுவரரின் திருக்கரங்களில் மீண்டும் செங்கோல் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சித்திரை முதல் ஆடி மாதம் வரை 4 மாதங்களுக்கு மீனாட்சி அம்மனும், ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்களுக்கு சுந்தரேசுவரரும் மதுரையை ஆட்சி செய்கின்றனா் என்ற ஐதீகப்படி இந்தப் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரும், கோயில் செயல் அலுவலருமான க. செல்லத்துரை, முன்னாள் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், கோயில் அறங்காவலா்கள், முக்கியப் பிரமுகா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வளையல் விற்ற லீலை...

ஆவணி மூலத் திருவிழா திருவிளையாடல் நிகழ்ச்சியாக சிவபெருமான் வளையல் விற்ற லீலை சனிக்கிழமை காலை நடைபெற்றது.

முந்தைய பிறவியில் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளாகப் பிறந்து, சாபத்தின் காரணமாக மதுரையில் அவதரித்திருந்த பெண்களுக்கு சாப விமோசனம் அளிக்க, இறைவன் சிவபெருமான் வளையல் வியாபாரியாக வந்து, வளையல் அணிவித்த ஐதீகப்படி இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.