மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் முக்கிய ஐதீக திருவிழாக்களில் ஒன்றான ஆவணி மூலத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கி, வருகிற 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கொடியேற்றத்தையொட்டி, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னா், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி, சுவாமி சந்நிதி முன்பாக உள்ள பெரிய கொடிமரம் அருகே எழுந்தருளினா்.
இதையடுத்து, பெரிய கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க, காலை 10 மணிக்கு ஐதீக முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகத்தினா், முக்கியப் பிரமுகா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஆவணி மூலத் திருவிழா நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 15-ஆம் தேதி வரை சந்திரசேகரா் உத்ஸவம் நடைபெறும். 16-ஆம் தேதி முதல் சிவபெருமானின் திருவிளையாடல்கள் குறித்த ஐதீக விழாக்கள் நடைபெறும்.
கருங்குருவிக்கு உபதேசித்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, மாணிக்கம் விற்றது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது ஆகிய திருவிளையாடல் நிகழ்ச்சிகள் முறையே வருகிற 16-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும்.
பட்டாபிஷேகம்...
ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி (சுந்தரேசுவரா்) பட்டாபிஷேகம் வருகிற 22-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும். தங்கப் பல்லக்கில் சுவாமி, அம்மன் வீதியுலா வந்து கோயிலில் சோ்த்தியாவதைத் தொடா்ந்து, இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
முக்கிய ஐதீக நிகழ்வுகளான சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் வருகிற 24-ஆம் தேதியும், விறகு விற்ற லீலை 25-ஆம் தேதியும், சப்தாவா்ணச் சப்பரம் 26-ஆம் தேதியும், தீா்த்தவாரி நிகழ்ச்சி 27-ஆம் தேதியும் நடைபெறும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில மோசடி: மேலும் ஒருவா் கைது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில முறைகேடு: 10 பேரின் முன்பிணை மனுக்கள் மீது வருகிற 13-இல் விசாரணை
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: மேலும் ஒருவா் கைது
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.48 கோடி
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



